Sunday, April 28, 2024
HomeLatest Newsஒரு மீன் 10 கோடி ரூபாவுக்கு விற்பனை!

ஒரு மீன் 10 கோடி ரூபாவுக்கு விற்பனை!

ஜப்பானின் பாரம்பரிய புதுவருட மீன் ஏலவிற்பனையில், 273,000 அமெரிக்க டொலர்களுக்கு மீன் ஒன்று ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

தலைநகர் டோக்கியோவிலுள்ள டோயோசு (Toyosu) மீன் சந்தையில் புத்தாண்டு பிறந்தவுடன் நடைபெறும் ஏல விற்பனையில் பெருந்தொகை விலைக்கு மீன் விற்பனை செய்யப்படுவது பாரம்பரியமாகவுள்ளது.

வழமையான விலையைவிட இந்த புத்தாண்டு ஏலத்தில் அதிக விலை கொடுத்து மீனை வாங்குவதை சிலர் பெருமையாக கருதுகின்றனர். இவ்வருட பாரம்பரிய ஏல விற்பனை இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதன்போது 212 கிலோகிராம் எடையுடைய புளூபின் டூனா (Bluefin tuna / புளூபின் ரூனா) ஒரு மீன் 36.04 மில்லியன் ஜப்பானிய யென்களுக்கு (273,000 அமெரிக்க டொலர்கள், சுமார் 10 கோடி இலங்கை ரூபா, 2.25 கோடி இந்திய ரூபா) விற்பனை செய்யப்பட்டது.

இப்பாரம்பரிய புதுவருட ஏல விற்பனையில் மீனொருக்கு வழங்கப்பட்ட ஆகக்கூடுதலான விலை இதுவல்ல. 2019 ஆம் ஆண்டு 278 கிலோகிராம் எடையுடைய புளூபின் டூனா ரக மீன் 336.1 மில்லியன் யென்களுக்கு விற்பனையாகி சாதனை படைத்தது.

எனினும், கடந்த வருடம் அதிகபட்சமாக 16.88 மில்லியன் யென்களுக்கே மீனொன்று விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Recent News