Friday, March 29, 2024
HomeLatest Newsதம்பதி மற்றும் குழந்தைகளுடன் மலையில் கவிழ்ந்த டெஸ்லா கார்; வெளியான அதிர்ச்சி பின்னணி!

தம்பதி மற்றும் குழந்தைகளுடன் மலையில் கவிழ்ந்த டெஸ்லா கார்; வெளியான அதிர்ச்சி பின்னணி!

அமெரிக்காவில் மனைவி, 2 குழந்தைகளை டெஸ்லா காரில் உள்நோக்கத்துடன் அழைத்து சென்று மலை பகுதியில் விபத்து ஏற்படுத்திய இந்திய வம்சாவளி கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் டெவில் ஸ்லைடு என்ற செங்குத்து பாறைகள் நிறைந்த மலைப்பாங்கான பகுதி உள்ளது. இந்த பகுதி வழியே மலையேற்ற வீரர்கள், சைக்கிள் ரேஸ் வீரர்கள் என சாகசகங்களில் ஈடுபடுவோர் செல்வதுண்டு.

இந்த பகுதி அதிக ஆபத்து நிறைந்து, விபத்து ஏற்படுத்த கூடிய பகுதியாக அறியப்படுகிறது. இந்த நிலையில், இந்திய வம்சாவளியான தர்மேஷ் ஏ பட்டேல் (வயது 41) என்பவர் தனது மனைவி, 9 வயது மகன் மற்றும் 4 வயது மகள் ஆகியோருடன் டெஸ்லா காரில் புறப்பட்டு சென்றுள்ளார்.

அவர்கள் அனைவரும் இந்த பாறைகள் நிறைந்த டெவில் ஸ்லைடு மலை பகுதி வழியே சென்றுள்ளனர். திடீரென கார் அந்த பகுதியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதுபற்றி தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சென்று 2 குழந்தைகளையும் மீட்டு, மேலே கொண்டு வந்தனர். ஹெலிகாப்டர் குழு ஒன்று பறந்து சென்று அந்த தம்பதியை மீட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

இதுபற்றி நடந்த விசாரணை முடிவில், பட்டேல் உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார் என பொலிசார் வெளியிட்ட அறிக்கை அதிர்ச்சியான தகவலை தெரிவிக்கின்றது.

இதுபற்றி கலிபோர்னியாவின் வனம் மற்றும் தீயணைப்பு துறையை சேர்ந்த உயரதிகாரி பிரையன் பொடிங்கர் கூறும்போது, இதுபோன்ற உயரம் நிறைந்த பகுதியில் இருந்து கீழே விழுந்த பின் உயிர் பிழைப்பது அரிது. அந்த குழந்தைகளுக்கு லேசான அளவிலேயே காயங்கள் ஏற்பட்டு உள்ளன.

நாங்கள் மீட்க சென்றபோது, காரில் உயிர்பிழைத்து இருந்தவர்களை பார்த்து உண்மையில் அதிர்ச்சி அடைந்தோம். அதன்பின்னரே, எங்களுக்கு ஒரு நம்பிக்கையான தருணம் பிறந்தது என்று அவர் கூறியுள்ளார்.

பொலிசார் அறிக்கையின்படி, பட்டேல் மீது கொலை மற்றும் குழந்தைகளை துன்புறுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது என தெரிய வந்துள்ளது.

அவர் மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததும் சான் மேதியோ கவுன்டி சிறைக்கு கொண்டு செல்லப்படுவார் என கூறப்படுகிறது.

Recent News