Friday, April 26, 2024
HomeLatest News25,000 வீடுகளில் சூரிய கலங்கள் மூலம் மின் உற்பத்தித் திட்டம்!

25,000 வீடுகளில் சூரிய கலங்கள் மூலம் மின் உற்பத்தித் திட்டம்!

குறைந்த வருமானம் பெறும் 25,000 வீடுகளுக்கு சூரிய கலங்கள் மூலம் மின்சாரம் வழங்கும் திட்டத்தை அரசாங்கம் தொடங்கவுள்ளது.

இதன் மூலம் 500 மெகாவொட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை தேசிய கட்டத்திற்கு சேர்க்க எதிர்பார்க்கப்படுகிறது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்திற்கான அமைச்சரவை பத்திரமும் அண்மையில் அங்கீகரிக்கப்பட்டது. இதன் கீழ் பல்வேறு காரணங்களால் நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ள 69,000 வீடுகளில் 25,000 வீடுகள் தெரிவு செய்யப்படவுள்ளது.

இந்த 25,000 வீடுகளின் கட்டுமானப் பணிகள் முதலில் முடிவடைந்து, மேற்கூரையில் பொருத்தப்படவுள்ள சூரிய கலங்கள் மூலம் 20 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

இந்த வீடுகளில் மின்சாரம் பயன்படுத்தப்படுவதோடு, தேசிய மின் கட்டமைப்பில் மின்சாரம் சேர்க்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்ட பல வீடமைப்புத் திட்டங்கள் 2017 ஆம் ஆண்டு முதல் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டுள்ளன.

மொனராகலை, அம்பாறை, மட்டக்களப்பு , திருகோணமலை, பொலன்னறுவை, அனுராதபுரம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய 11 மாவட்டங்களில் அரச காணிகளில் ஆரம்பிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட வீட்டுத் திட்டங்களுக்கு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

வெளிநாட்டு நிறுவனத்துடன் இணைந்து இத்திட்டம் செயற்படுத்தப்படும் என்றும், சூரிய கலங்களின் பராமரிப்பு 20 ஆண்டுகளுக்கு முதலீட்டாளரால் மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 648 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே, இலங்கைக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான வருடாந்த செலவில் 116.64 மில்லியன் அமெரிக்க டொலர்கள் சேமிக்கப்படும் என்றும், ஒப்பந்தம் செய்யப்பட்ட இருபது வருட காலப்பகுதியில் இந்த திட்டமானது 2,332.80 மில்லியன் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணியை நாட்டுக்கு சேமிக்கும் என அமைச்சர் ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Recent News