Sunday, December 29, 2024
HomeLatest Newsஜனாதிபதி பதவி மீது இலக்கு வைத்திருந்த ரணிலின் கனவு பலிக்குமா?

ஜனாதிபதி பதவி மீது இலக்கு வைத்திருந்த ரணிலின் கனவு பலிக்குமா?

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகரிடம் கையளித்ததன் பின்னர் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தலை நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

குறிப்பிடப்படாத இடத்தில் தங்கியிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் புதன்கிழமை பதவி விலகுவார் என்று சபாநாயகர் சனிக்கிழமை இரவு அறிவித்திருந்தார்.

அதனை இன்று அவர், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடமும் உறுதிப்படுத்தியுள்ளார்.

நேற்று மாலை வரை அரசியல் கட்சிகளுக்குள் நடைபெற்ற விவாதங்களைத் தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 115 ஆசனங்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கிறார்.

சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதால், அதனை கைவிடவேண்டாம் என்றும், ஜனாதிபதி பதவியை ஏற்குமாறும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரிடம் கோரியுள்ளனர்.

இது நடக்குமானால் இதுவரை காலமும் ஜனாதிபதி பதவி மீது இலக்கு வைத்திருந்த ரணிலின் கனவு பலிக்கும்.

எனினும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அவர், ஜனாதிபதி பதவியை ஏற்பாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் சனிக்கிழமை கலவரத்தின் பின்னர் தனித்தனியாக கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

இந்தநிலையில் அவர் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், பிரதமர் வேட்பாளராக டளஸ் அலகப்பெரும நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், நேற்று மாலை வரை, சஜித் நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவைப் பெறவில்லை.

ரணில் விக்ரமசிங்க பதவியில் தொடர்ந்தால், ராஜபக்சவின் பதவி விலகலைத் தொடர்ந்து அவர் புதன்கிழமை ஜனாதிபதியாக பதவியேற்பார்.

அத்துடன் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் வரை, அவர் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்து சில வகையான பொருளாதார இயல்புகளை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்துவார்.

விக்கிரமசிங்கவின் பிரதமர் வேட்பாளர் யார் என்பது இன்னும் நிச்சயமற்ற நிலையில் உள்ளது.

ஆனால் அவர் பொருத்தமான வேட்பாளரை பரிந்துரைக்க நாடாளுமன்றின் உதவியை அவர் நாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை ரணில் விக்ரமசிங்க பதவி விலகினால், நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 30 நாட்களுக்கு ஜனாதிபதியாக தற்காலிகமாக புதன்கிழமை பதவியேற்பார்.

இதன் போது நாடாளுமன்றம் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் – பெரும்பான்மை ஆதரவைக் கொண்ட எந்தவொரு வேட்பாளரும் ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார்.

இன்று மாலை அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் பிரதமர், இந்த வாரம் நாட்டிற்கு வரவுள்ள எரிபொருள் ஏற்றுமதி மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகள் குறித்து கலந்துரையாடவுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச காணொளி மாநாடு மூலம் அமைச்சரவை கூட்டத்தில் இணைய வாய்ப்பிருக்கிறது.

அமைச்சர்களின் பதவி விலகல் கடிதங்கள் எதுவும் ஜனாதிபதியால் ஏற்றுக்கொள்ளப்படாததால், அவர்கள் தங்கள் பொறுப்புக்களில் நீடிப்பார்கள் என்று தெரியவருகிறது.

முன்னதாக ஹரீன் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, தம்மிக்க பெரேரா மற்றும் பந்துல குணவர்தன ஆகியோர் தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகினர்.

எனினும் இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent News