Thursday, January 23, 2025
HomeLatest Newsஇலங்கையில் ஒன்லைனில் பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் ஒன்லைனில் பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் ஒன்லைனில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதற்காக விளம்பரங்களை வெளியிடுவோரின் வங்கிக் கணக்குகளில் நுட்பமாக நுழையும் கும்பல் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.

அதற்கமைய, இதுவரையில் 60 லட்சம் ரூபாவை மோசடி செய்த கும்பலை சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் இணையம் மற்றும் ஊடுருவல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் ஒன்லைன் ஊடாக வர்த்தகம் செய்யும் சுமார் இருபது பேர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வழங்கிய முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின் பின்னர் கண்டி, தலத்துஓயா, மதவாச்சி போன்ற பிரதேசங்களில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட பொருளை விற்பனை செய்வதாக இணையத்தில் பதிவிடப்பட்டிருக்கும் விளம்பரத்தை அவதானிக்கும் கொள்ளையர்கள் அதில் இருக்கும் இலக்கத்திற்கு தொடர்பு கொள்கின்றார்கள். 

தாங்கள் இந்த பொருளை பெற்றுக்கொள்வதாக கூறும் கொள்ளையர்களுக்கு, கொள்வனவை உறுதி செய்யும் வகையில் அதற்கு முன்பணம் தருவதாக கூறியுள்ளனர்.

அதற்காக அந்த விற்பனையாளர்களின் வங்கி கணக்குகளின் விபரங்கள் உள்ளிட்ட ஏனைய விபரங்களை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் பொருளை விற்பனை செய்யும் நபரின் வங்கி கணக்கிற்குள் நுழைவதற்காக கணக்கு உரிமையாளர்களின் வங்கிக்கு வரும் OTP இலக்கத்தை நுட்பமாக பெற்றுக் கொள்வதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய, பொருட்களை விற்பனை செய்யும் நபர்களின் கணக்குகள் நுட்பமாக அணுகும் கும்பல் அந்த கணக்கில் உள்ள பணத்தை தங்கள் கணக்கிற்கு மாற்றிக் கொள்கின்றார்கள்.

அந்தக் கணக்குகளுக்கு வேறு நபர்களின் தேசிய அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி மோசடியாளர்கள் புதிய கணக்குகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிற செய்திகள்

Recent News