Thursday, January 23, 2025
HomeLatest Newsதமிழின விடுதலைக்கான பயணத்தை வெளியிட்ட வேலன் சுவாமிகள்!

தமிழின விடுதலைக்கான பயணத்தை வெளியிட்ட வேலன் சுவாமிகள்!

ஒரு இனத்தின் விடுதலையினை நோக்கிய பயணத்தில் பல தடை கற்கள் வரும். அவைகளை கடக்க வேண்டும் என்ற இலட்சிய வேகத்தினையும் ஊந்து சக்தியினையும் இந்த அனுபவம் தருகின்றது என வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கான வழக்கை பெப்ரவரி 28ம் திகதி தவணையிட்டு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஜனவரி 15 ஆம் திகதி ஜனாதிபதியின் யாழ்ப்பாண விஜயத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகளின் வழக்கு விசாரணை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் இன்று(31)இடம்பெற்றது.

இன்றைய தினம் இடம் பெற்ற யாழ் நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் முடிவடைந்த பின்னர் ஊடகங்களிற்கு கருத்து வெளியிடும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் குறிப்பிடுகையில், இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றிலே எமது வழக்கு முன்னெடுக்கப்பட்டது.

எம் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி தவராசா ஐயா, சட்டத்தரணி சுகாஷ் அவர்களும் மேலும் சில சட்டத்தரணிகளும் ஆஜராகியிருந்தார்கள். இவ் வழக்கில் என்னுடன் இருவர் இணைக்கப்பட்டிருந்தார்கள். இன்று மீண்டும் 6 பேர் இணைக்கப்பட்டுள்ளனர். வழக்கு பிப்ரவரி 28 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சிவில் சமூக செயற்பாட்டாளர்களாக தமிழ் மக்களின் உரிமைகள் சார்ந்து கோரிக்கைகளினை முன் வைக்கும் எமது பயணம் அற மற்றும் அமைதி வழியில் இருக்கிறது.

அதனடிப்படையில் பயணம் தொடரும். எதிர்வரும் நாட்களில் பல்கலை மாணவர்கள், பாதிக்கப்பட்ட தரப்புகள், சிவில் சமூகம் முன்னெடுக்கும்அமைதி வழி பேரணிகளிலும் எமது பங்களிப்பு இருக்கும். இவ்வாறான பயணத்திற்கு தமிழ் தேசியத்தின் பால் அக்கறையுடைய அனைத்து தரப்புகளும் விழிப்படைய வேண்டும்.

உங்களின் சார்பிலும், இனம் சார்ந்துமே நாங்கள் முன்னிலைப்படுத்தப்படுகின்றோம். மாறாக எமது தனிப்பட்ட தேவைகளோ, பிரச்சினைகளோ கருதி முன்னிலைப்படுத்தப்படவில்லை.

அவ் வகையில் இன்று தான் முதன் முதலான அனுபவம் கிடைக்கபெற்றுள்ளது. ஒரு இனத்தின் விடுதலையினை நோக்கிய பயணத்தில் பல தடை கற்கள் வரும். அவைகளினை கடக்க வேண்டும் என்ற இலட்சிய வேகத்தினையும் ஊந்து சக்தியினையும் இந்த அனுபவம் தருகின்றது. எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recent News