Friday, April 26, 2024
HomeLatest Newsஇலங்கையர்களுக்கு தொலைபேசியில் வரும் ஆபத்து! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கையர்களுக்கு தொலைபேசியில் வரும் ஆபத்து! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தொலைபேசிக்கு போலி அழைப்புக்களை மேற்கொண்டு இலங்கையர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைபேசி வலையமைப்பின் பெயரை பயன்படுத்தி இந்த மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

சிலரின் தனிப்பட்ட தகவல்களை அறிந்து கொண்டுள்ள குறித்த கும்பல், அவர்களுக்கு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொண்டு, பிரபல தொலைபேசி வலையமைப்பில் நடத்தப்பட்ட குலுக்களில் உங்களது தொலைபேசி இலக்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளது என்றும், லட்சக்கணக்கான பணப்பரிசில்களை வென்றுள்ளீர்கள் என்றும் அந்த கும்பல் தெரிவிக்கின்றது.

இதன்மூலம், மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ளும் குறித்த குழுவினர் தாங்கள் வென்ற பணத்தினைப் பெற்றுக் கொள்வதென்றால் அதற்கு வரி செலுத்த வேண்டும் என்றும், அதற்காக இரண்டு மணி நேரத்திற்குள் குறிப்பிடும் வங்கிக் கணக்கில் ஒரு இலட்சம் முதல் இரண்டு இலட்சம் ரூபா வரையான வரி பணத்தினை செலுத்திவிட்டு தாங்கள் வென்ற பணத்தினைப் பெற்றுக் கொண்டு செல்லலாம் என்றும் அறிவிக்கின்றது.

அத்துடன், அழைப்பினைப் பெற்றுக் கொண்டவர்களுக்கு சந்தேகம் ஏற்படாத வகையில் கவர்ச்சிகரமான வார்த்தைகளாலும், பிரபல தொலைபேசி வலையமைப்பின் வர்த்தக விளம்பரங்களையும் பயன்படுத்த்தி அவர்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர்.

ஒருவேளை, அவ்வாறு வரி பணம் செலுத்த முடியவில்லை என்றால், அந்த குலுக்கல் போட்டியில் இருந்து தாங்கள் விலகுகின்றோம் என்றும், ஆறுதல் பரிசினை மாத்திரம் பெற்றுக் கொள்கின்றோம் எனவும், மிகுதி பணத்தினை இலங்கை இராணுவத்திற்கு வழங்குகின்றோம் என்றும் முத்திரையிடப்பட்ட காகிதத்தில் கடிதம் எழுதி, அவர்கள் அனுப்பும் விலாசத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

எனினும், ஆறுதல் பரிசினை பெற சிறிதளவான பணத்தினை வைப்புச் செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கோருகின்றனர்.

அத்துடன், பணம் வைப்பிலிடும் வரை தொலைபேசி அழைப்பினை துண்டிக்கக்கூடாது என்றும், இது அழைப்பை ஏற்படுத்துபவர்களுக்கும், பெற்றுக்கொள்பவருக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்றும் மறைமுக அச்சுறுத்தலை அவர்கள் விடுக்கின்றனர்.

இந்த தகவலை நம்ப வைப்பதற்காக, தொலைபேசி வலையமைப்பின் முகாமையாளர், பிரதேசத்திற்கு பொறுப்பானவர், குலுக்கல் போட்டிக்கு பொறுப்பானவர் என்று சிங்களம், தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மூன்று மொழிகளிலும் அவர்கள் உரையாடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், இவை போலி அழைப்புகள் என்றும் அவ்வாறான அழைப்புக்கள் வருமிடத்து சம்பந்தப்பட்ட தொலைபேசி வலையமைக்கு அழைப்பினை ஏற்படுத்தி அதனை உறுதிப்படுத்துவதன் முறைப்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Recent News