பணத்தை கொள்ளையடித்த தம்பதி இருவரை இலவச ஜூஸினை வழங்கி பொலிஸார் மடக்கிப்பிடித்தமை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்திலுள்ள நிதி நிறுவனத்திற்குள் கடந்த 10 ஆம் திகதி பட்டப்பகலில் நுழைந்த அயுதமேந்திய கும்பல், அங்கிருந்தவர்களை மிரட்டி 8 கோடியே 49 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இதையடுத்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார் சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை கைது செய்துள்ளனர்.
அதன் பொழுது மந்தீப் கவுர் என்ற பெண்ணும் அவரது கணவர் ஜெஸ்வீந்தர் சிங்கும் இந்த கொள்ளையில் முக்கிய குற்றவாளிகள் என் தெரிய வந்தமையால் அந்த தம்பதியை கைது செய்ய பொலிஸார் தீவிரம் காட்டியுள்ளனர்.
அத்துடன், இருவரும் நேபாளத்திற்கு தப்பிச்செல்வதற்கு திட்டமிடுவதாக கிடைத்த தகவலையடுத்து நாட்டை விட்டு வெளியேற முடியாதவாறு லுக் அவுட் நோட்டீஸ்சும் அனுப்பப்பட்டுள்ளது.
அதையடுத்து இருவரும் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருப்பதும், நேபாளத்திற்கு செல்வதற்கு முன்னர் அங்குள்ள சீக்கிய மத வழிபாட்டு தலமான ஹிம்ஹண்ட் ஷாகிப், ஹரித்வார், கேதார்நாத்தில் உள்ள இந்து மத வழிபாட்டு தலங்களில் வழிபாடு நடத்துவதற்கு அவர்கள் செல்லத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது.
இதனால், அந்த வழிபாடு தளத்திற்கு விரைந்த பொலிஸார், அங்கு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தமையால் புது திட்டத்தினை தீட்டி பக்தர்களுக்கு இலவசமாக பழஜூஸி னை மாறுவேடத்தில் வழங்கியுள்ளனர்.
பக்தர்கள் அனைவரும் இலவச பழ ஜூஸினை வாங்கி கொண்டிருந்த வேளை, 8 கோடி ரூபாய் பணத்தை கொள்ளையடித்த குறித்த தம்பதி இலவச பழ ஜூசை பெற்று சென்ற வேளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
பின்னர் இருவரையும் பின் தொடர்ந்து சென்ற பொலிஸார் இருவரும் வழிபாடு நடத்திய பின்னர் அதிரடியாக கைது செய்துள்ளதுடன் அவர்கள் கொள்ளோயடித்த 8 கோடி ரூபாயில் இதுவரை 6 கோடி ரூபாயையும் பறிமுதல் செய்துள்ளனர்.
மேலும், உத்தரகாண்டில் கைது செய்யப்பட்ட தம்பதியை பொலிஸார், பஞ்சாப் அழைத்து வரவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.