கடந்த 7ம் திகதி ஹமாஸ் படையினர் நடத்திய திடீர் தாக்குதலை அடுத்து பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்கான குடி தண்ணீர் மற்றும் மின்சார சேவையை இஸ்ரேல் தடை செய்தது.
இதனால் பாலஸ்தீனத்தில் வாழும் மக்கள் குடிக்க, குளிக்க, மற்றும் அத்தியாவசிய
தேவைகளுக்கான தண்ணீருக்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கடைகளில் எந்தவொரு பொருட்களும் இல்லை. அப்படியே ஓரிரு இடங்களில் ஏதாவது
பொருட்கள் கிடைத்தாலும் அவற்றின் விலை உச்சத்தில் இருப்பதாக மக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு செல்லும் மூன்று தண்ணீர் குழாய்களில் இரண்டு குழாய்களை இஸ்ரேல் திறந்துள்ளது. இதன் மூலம் காசா பகுதிக்கு சுமார் 28.5 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைக்க பெறுகிறது.
இதற்கிடையே கடுமையான உணவு தட்டுப்பாடு காரணமாக காசாவில் உள்ள பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிவாரண முகாம்களை தாக்கி அங்குள்ள மாவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை மக்கள் எடுத்து சென்று இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
இதேவேளை , காசா பகுதிக்கான உணவுப் பொருட்கள் போதுமானதாக இல்லை என உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், உதவிகளை ஏற்றிச் செல்லும் மேலும் 40 கொள்கலன்கள் காசா பகுதிக்குள் பிரவேசிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.