சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்த மாநாடு ஆகியவற்றில் கலந்துகொள்ள இலங்கை பிரதிநிதிகள் தீர்மானித்துள்ளனர்.
இதற்கமைய தாம் உள்ளிட்ட பிரதிநிதிகள் இந்த மாநாடுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வொஷிங்டன் நகரில் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர், நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடனை பெற்றுக் கொள்ளுதல் போன்ற செயற்பாடுகள் காரணமாக இம்முறை மாநாடு இலங்கைக்கு மிக முக்கியம் வாய்ந்ததாக அமையும் என பதில் நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கைக்கு மேலும் நிதி உதவி வழங்கத் தயாராக உள்ளதாக வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவா தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் வருடாந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் நிறைவடைந்ததன் பின்னர், இலங்கைக்கான கூடுதல் நிதி ஆதாரங்களை வழங்குவது தொடர்பில் ஆராயவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உணவுக்கான உதவியை உறுதி செய்வதற்கும் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் 200 மில்லியன் டொலர் அவசரக் கடனுக்கான உடன்படிக்கையில் அண்மையில் ஆசிய அபிவிருத்தி வங்கி கைச்சாத்திட்டது.
இந்தநிலையில் இலங்கையின் பொருளாதாரம் சுருங்கியுள்ளது. அத்துடன் உயர் பணவீக்கம் எதிர்கொள்ளப்படுகிறது.
இது வாழ்க்கைத் தரத்தை கடுமையாக பாதித்துள்ளது என அசகாவா கூறியுள்ளார்.
இதேவேளை சர்வதேச நாணய நிதியத்துடன் சுமார் 2.9 பில்லியன் டொலர் கடனுக்கான பணியாளர்கள் அளவிலான ஒப்பந்தத்தை இறுதி செய்ய கொழும்பு நிர்வாகம் செயற்பட்டு வருவதாக தாம் நம்புவதாகவும் அசகாவா குறிப்பிட்டுள்ளார்.