Thursday, April 18, 2024
HomeLatest Newsஇலங்கையில் தாறுமாறாக உயரும் விலைகள்; இழுத்து மூடப்பட்ட பத்தாயிரம் ஹோட்டல்கள்!

இலங்கையில் தாறுமாறாக உயரும் விலைகள்; இழுத்து மூடப்பட்ட பத்தாயிரம் ஹோட்டல்கள்!

உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயர்ந்து வருவதை அடுத்து ஏற்பட்ட நஷ்டத்தால் நாடு முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நட்சத்திர நிலை ஹோட்டல்கள், விலாக்கள், விருந்தினர் மாளிகைகள் மற்றும் இதர சுற்றுலா விடுதிகள் முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன.

இலங்கை ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் உப தலைவரும் கேகாலை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதம அமைப்பாளருமான பிரியந்த திலகரத்ன இதனைத் தெரிவித்தார்.

மின்கட்டண அதிகரிப்பால் ஹோட்டல்கள், விருந்தினர் மாளிகைகள் உட்பட கிட்டத்தட்ட பத்தாயிரம் சுற்றுலா விடுதிகள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹோட்டல் துறையில் பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வந்த சுமார் 50 ஆயிரம் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள், ஹோட்டல் துறைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியால் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டதாகவும், இது ஹோட்டல் மற்றும் சுற்றுலா விடுதிகளை நடத்துவதற்கு பெரும் தடையாக இருப்பதாகவும் திலகரத்ன தெரிவித்தார்.

மேலும், விடுதி ஒன்றின் மின் கட்டணம் சராசரியாக 10,000 ரூபாவாக இருந்ததாகவும், புதிய திருத்தத்தின்படி, 60,000 ரூபாவாக மின் கட்டணம் உயரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹோட்டல்களின் மின்சார கட்டணம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அத்துடன், ஹோட்டல்களின் குடிநீர் கட்டணமும் பெருமளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கும் ஹோட்டல் உரிமையாளர்கள், பாண் மாவு மற்றும் முட்டையின் விலை அதிகரிப்பால், கேக், சான்விச் போன்ற உணவுப் பொருட்களை தயாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, ஹோட்டல்கள் நடத்துவதற்கு மின்வெட்டு பெரும் தடையாக உள்ளதாகவும், ஜெனரேட்டர்கள் இல்லாத ஹோட்டல்கள் பாரிய பிரச்சினையை எதிர்நோக்கி வருவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மின்சாரம் தடைப்படும் காலங்களில் ஜெனரேட்டர்களை இயக்குவதால் பல ஹோட்டல்கள் கூடுதல் செலவுகளை சுமக்க வேண்டியுள்ளதாக காலி பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் ரொய்லெட் பேப்பரின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளதாகவும், 100 ரூபாயாக இருந்த ஒரு பேப்பரின் விலை தற்போது 400 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

95 சதவீத ஹோட்டல்கள் வங்கிகளில் பெற்ற கடனிலேயே இயங்குவதாகவும், ஹோட்டல்களின் வருமானம் பெருமளவில் குறைந்துள்ளதால், இன்று வங்கிக் கடனைக் கூட செலுத்த முடியாமல் ஹோட்டல் உரிமையாளர்கள் தவிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில ஹோட்டல்கள் அவற்றின் உரிமையாளர்களால் வேறு நபர்களுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளன, ஆனால் அவர்களும் ஹோட்டல்களை நடத்த முடியாததால் அசல் உரிமையாளர்களிடமே திருப்பிக் கொடுத்துள்ளனர்.

இதற்கிடையில், சுற்றுலாத்துறையின் வீழ்ச்சியால் கிட்டத்தட்ட 2,000 சுற்றுலா வழிகாட்டிகள் ஆதரவற்ற நிலையில் இருப்பதாக சுற்றுலா வழிகாட்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Recent News