அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் விஜதாச ராஜபக்சவின் கருத்துக்களை நாங்கள் வரவேற்கின்றோம் என ஜனநாயக போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது.
இன்று (30) அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையிலியே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமல் மிக நீண்டகாலமாக விசாரணைகள் ஏதும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இலங்கையின் நீதி அமைச்சர் விஜதாச ராஜபக்சவின் கருத்துக்களை நாங்கள் வரவேற்கின்றோம்.
அதற்கமைய அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தமிழர் பரப்பில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடும் அனைத்து தரப்பினரும் ஒருமித்து அவர்களின் விடுதலைக்காக காத்திரமாக செயலாற்ற வருமாறு உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
12 ஆயிரத்திற்கும் அதிகமான போராளிகளை, போராளிகளின் மீது மட்டும் நம்பிக்கை வைத்து விடுவித்ததை போல மிக நீண்ட காலமாக பல்வேறு சிறைகளில் வதைபட்டுக் கொண்டு இருக்கும் அரசியல் கைதிகள் விடயத்திலும் தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பிலும் நிறைவேற்று அதிகாரம் உடைய ஜனாதிபதி ரணில் அவர்கள் அதே முன்மாதிரிகளை கருத்தில் கொண்டு செயலாற்ற வேண்டுமென்பதே தமிழர்களின் அபிலாசைகளாகும்.
யுத்தம் முடிவுற்றதின் பின்னரான கடந்த 13 வருடங்களாக தமிழர்கள் தமது இன்னல்களில் இருந்து விடுபட காத்திரமான நீதிப் பொறிமுறை ஒன்றை வேண்டி வந்திருக்கின்றோம்.
இலங்கை தொடர்பான அதன் எல்லா நடவடிக்கைகள் மற்றும் செயலமர்வுகளிலும் ஐ.நா வின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகராலயமும் குறிப்பிட்ட நீதிப்பொறிமுறைகளை உருவாக்குவது பற்றி தனது பரிந்துரைகளைச் செய்துள்ளது.
இலங்கையில் புரையோடிப்போயிருக்கும் பிரச்சனைகள் சம்பந்தமாகவும் தமிழ் மக்களின் அபிலாஷைகள் குறித்ததுமான 4 தசாப்த காலமான அனுபவமும் பார்வையும் இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கே உண்டு எனவும் நாம் நம்புவதோடு, ஜனநாயகம் மற்றும் நீதிப்பொறிமுறைகள் தொடர்பான சர்வதேச நியமங்கள் குறித்ததான ஓர் கரிசனையும் அவருக்கு உள்ளது என நாம் நம்புகின்றோம் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.