Thursday, January 23, 2025
HomeLatest Newsஇலங்கையை எச்சந்தர்ப்பத்திலும் கைவிடப்போவதில்லை ரணிலிடம் உறுதியளித்த மோடி!

இலங்கையை எச்சந்தர்ப்பத்திலும் கைவிடப்போவதில்லை ரணிலிடம் உறுதியளித்த மோடி!

“அயல் நாடான இலங்கையை இந்தியா எந்தச் சந்தர்ப்பத்திலும் கைவிடாது. இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள் அதிகரிக்கப்பட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தொடர்ந்து உதவியளிக்கப்படும்.”

– இவ்வாறு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேரில் உறுதியளித்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

ரணில் விக்கிரமசிங்கவுக்கும், நரேந்திர மோடிக்கும் இடையில் இடம்பெற்ற சிநேகபூர்வ சந்திப்பின்போதே இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதி நிகழ்வில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த நிலையிலேயே நேற்று மாலை இருவருக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றது.

சில நிமிடங்கள் இருவரும் நேரில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுகளின் தற்போதைய நிலை மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக நரேந்திர மோடி, ரணில் விக்கிரமசிங்கவிடம் வினவினார்.

இதையடுத்து இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும் என்ற ரணில் விக்கிரமசிங்கவின் கோரிக்கையை சாதகமாக ஏற்றுக்கொண்ட நரேந்திர மோடி, அயல் நாடான இலங்கையை இந்தியா எந்தச் சந்தர்ப்பத்திலும் கைவிடாது என்றும், இலங்கையில் இந்தியாவின் முதலீடுகள் அதிகரிக்கப்பட்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தொடர்ந்து உதவியளிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Recent News