Friday, November 22, 2024
HomeLatest NewsIndia Newsமங்கோலியாவில் சர்வதேச அமைதிப் படை இராணுவ பயிற்சி...!இந்தியாவும் பங்கேற்பு...!

மங்கோலியாவில் சர்வதேச அமைதிப் படை இராணுவ பயிற்சி…!இந்தியாவும் பங்கேற்பு…!

மங்கோலியாவில் இந்தியா உள்பட 20 நாடுகளைச் சோ்ந்த இராணுவ வீரர்கள் பங்கேற்கும் சா்வதேச அமைதிப் படை பயிற்சி ஆரம்பமாகியுள்ளது.

மங்கோலிய பாதுகாப்புப் படை மற்றும் அமெரிக்க இராணுவத்தின் பசிபிக் படை இணைந்து நடத்தும் நிகழாண்டு எக்ஸ் கான் க்வெஸ்ட் பயிற்சி நடவடிக்கையை அந்நாட்டு அதிபா் உக்நாகின் குரெல்சுக் திங்கட்கிழமை ஆரம்பித்து வைத்துள்ளார்.

அந்த வகையில், இந்திய இராணுவம் சார்பாக கா்வால் ரைஃபிள்ஸ் படைப்பிரிவினா் இந்த அமைதி காக்கும் பயிற்சியில் பங்கேற்கின்றனர்.

14 நாட்களிற்கு இடம்பெறும் இந்த பயிற்சி ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படை வீரா்களுக்குப் பயிற்சி அளிப்பது, பயிற்சி நடவடிக்கையில் பங்குபற்றும் நாடுகளின் செயல்தன்மையை மேம்படுத்துதல் மற்றும் வீரா்களுக்கு இடையே அனுபவத்தைப் பகிா்தல் போன்றவற்றை நோக்கமாகக் கொண்டது.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் ஐ.நா.சபையின் அமைதி காக்கும் பணிகளில் பங்கேற்கும் வீரா்களைத் தயாா்படுத்தவும், நாடுகளின் அமைதி நடவடிக்கை திறன்கள் மற்றும் இராணுவ தயார் நிலையை மேம்படுத்தவும் இந்த பயிற்சி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இவை மட்டுமன்றி இந்த அமைதிப் படை பயிற்சியில் களப் பயிற்சி நடவடிக்கைகள், போா் குறித்த விவாதங்கள், விரிவுரைகள் மற்றும் செயல்விளக்கங்கள் போன்றனவும் உள்ளடங்குகின்றன.

இது தொடர்பாக மத்திய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அது, இந்த இராணுவப் பயிற்சியானது இந்திய இராணுவம் மற்றும் பங்கேற்கும் நாடுகளிற்கிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தும்.

அதிலும் குறிப்பாக, மங்கோலிய ஆயுதப் படைகளுடன் இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News