Friday, November 22, 2024
HomeLatest Newsவடக்கில் நீரிழிவு நோயால் அதிகளவு பாதிக்கப்படும் இளைய தலைமுறையினர், மாணவர்கள்! காரணம் என்ன? வைத்தியர் விளக்கம்

வடக்கில் நீரிழிவு நோயால் அதிகளவு பாதிக்கப்படும் இளைய தலைமுறையினர், மாணவர்கள்! காரணம் என்ன? வைத்தியர் விளக்கம்

கடந்த கோவிட் காலத்தில் வடமாகாணத்தில் இளைய தலைமுறையினர், குறிப்பாக 20-40 வயதுக்கு இடைப்பட்டவர் இளைஞர், யுவதிகள், எத்தனையோ பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணி பெண்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகிறார்கள் என யாழ். போதனா வைத்தியசாலையின் சிறப்பு வைத்திய நிபுணர் அரவிந்தன் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி சர்வதேச நீரிழிவு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் முக்கிய தொனிப்பொருள் என்னவெனில் இளைய தலைமுறையினரை நீரிழிவில் இருந்து பாதுகாத்தல். 

கொழும்பு மாவட்டத்தில் ஏறக்குறைய 30 சதவீதமானோருக்கு நீரிழிவு நோய் இருக்கின்றது. யாழ்ப்பாணத்தில் 15 சதவீதமானோருக்கு நீரிழிவு நோய் இருக்கின்றது.

கடந்த கோவிட் காலத்தில் அதாவது 2, 3 வருடங்களாக எமது வடமாகாணத்தில் இளைய தலைமுறையினர், குறிப்பாக 20-40 வயதுக்கு இடைப்பட்டவர்கள் இளைஞர், யுவதிகள் மத்தியில்  நீரிழிவுத் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

இதற்கு முக்கிய கரணம் எமது வாழ்க்கை நடைமுறையில் ஏற்பட்ட மாற்றம். அதாவது ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கங்கள். குறிப்பாக மேலைத்தேய உணவு பழக்கத்திற்கு அடிமையாதல் முக்கிய காரணம்.

அதேபோல் உடற்பயிற்சி அற்ற வாழ்க்கை முறை இதற்கு முக்கிய காரணம். மன அழுத்தம், தூக்கம் இன்மை போன்ற உளத்தாக்கங்கள் கூட நீரிழிவு நோய்த் தாக்கம் அதிகளவு ஏற்படுவதற்கு முக்கியமான காரணங்கள்.

எமது வடமாகாணத்தை எடுத்துக்கொண்டால் எத்தனையோ பாடசாலை சிறுவர்களுக்கு நீரிழிவு நோய் இருக்கின்றது. இதற்கு முக்கிய காரணம் உடல் பருமன் அதிகரித்தலாகும். கழுத்து பகுதியினை பார்த்தால் கருமை நிறமாக இருக்கும். இது நீரிழிவு வருவதற்கான அறிகுறிகளாகும்.

அதேபோல் பெண்களுக்கு வட மாகாணத்தில் நீரிழவு நோய் அதிகரித்து வருகிறது. முன்னைய காலக்கட்டத்தில் பெண்கள் கர்ப்ப காலங்களில் நீரிழிவு நோய்க்கு உள்ளாவது குறைவாக இருக்கின்றது.

ஆனால் இன்று எத்தனையோ கர்ப்பிணி பெண்கள் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுகிறார்கள். கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் ஏற்படுகின்ற பொழுது அது கர்ப்பிணியை மாத்திரம் அல்ல வயிற்றில் இருக்கும் சிசுவையும் பாதிக்கும். ஆகவே வருமுன் காப்பது அவசியம். ஆகவே பெண்கள் திருமணத்திற்கு முன்னர் உடற்பருமனை உடற்திணிவுச் சுட்டெண் விதத்தில் வைத்திருக்க வேண்டும்.

நிரிழிவினை முற்றுமுழுதாக குணப்படுத்தலாம் என்று எங்கள் சமூகத்தில் தப்பான அபிப்பிராயம் ஒன்று இருக்கிறது. அத்துடன் இந்நோய்க்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் கிட்னியை பாதிக்கும் என்று அதனை சிலர் உள்ளெடுப்பதில்லை. கண் குருடாவதற்கு முக்கிய காரணம் இந்த நீரிழிவு. ஆண்மை குறைபாடு, கர்ப்பம் தரித்தல், சிறுநீரக மாற்று சத்திரசிகிச்சை, நரம்பு பாதிப்பு என்பவற்றுக்கு காரணம் இந்த நீரிழிவு.

உலகத்தில் 10 செக்கனுக்கு ஒருவர் தனது காலினை இழந்துகொண்டிருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம் நீரிழிவு. ஆகவே நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வு மக்கள் மத்தியில் இன்றியமையாதது. 

ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். மன அழுத்தங்களில் இருந்து விடுபட வேண்டும். இந்த நீரிழிவு மாதத்தில் அனைவரும் பரிசோதித்து பார்க்க வேண்டும். இந்நோய் உள்ளவர்கள் வைத்திய ஆலோசனை பெற்று அதுக்கேற்ற வகையில் சிகிச்சையினை பெற்றுக்கொள்ள வேண்டும்.

வருகின்ற எதிர்வரும் நவம்பர் 14 ஆம் திகதி நீரிழிவு விழிப்புணர்வுக்காக நாங்கள் உங்களுடன் ஒரு நடை பயணத்தை மேற்கொள்ள இருக்கிறோம். யாழ்.போதனா வைத்தியசாலையில் இருந்து ஆரம்பித்து பிரதான வீதியின் ஊடாக கச்சேரி யாழ்.மாவட்ட செயலகத்தினை அடைய இருக்கிறோம். அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.- என்றார்.

பிற செய்திகள்

Recent News