சிலாபம், வென்னப்பு – வைக்கால் கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட சடலம், கடந்த 15ஆம் திகதி கதிரான பாலத்தில் இருந்து தாயாரால் களனி ஆற்றில் வீசப்பட்ட ஐந்து வயது சிறுவனுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சிறுவனின் சடலம் அவரது பாட்டியால் அடையாளம் காணப்பட்டது எனப் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
களனி – கதிரான பாலத்தில் இருந்து கடந்த 15 ஆம் திகதி குறித்த சிறுவனைக் களனி ஆற்றில் வீசிய சந்தேகநபரான தாய், தானும் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றபோது, பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டார்.
இதையடுத்து அவர் வத்தளைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஆற்றில் வீசப்பட்ட சிறுவனைக் கண்டுப்பிடிக்க தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், வென்னப்புவ – வைக்கால் கடற்கரையில் இன்று காலை சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருந்தான்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.