Saturday, May 4, 2024
HomeLatest Newsகொழும்பு அரசியலில் உச்சகட்ட பரபரப்பு! – இன்று தீர்க்கமான சந்திப்பு

கொழும்பு அரசியலில் உச்சகட்ட பரபரப்பு! – இன்று தீர்க்கமான சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த அழைப்பையேற்று அவருடன் இன்று (29) பேச்சு நடத்துவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உட்பட 11 கட்சிகளின் கூட்டணி தீர்மானித்துள்ளது.

சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் நேற்று (28) நடைபெற்ற கலந்துரையாடலின்போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வக்கட்சி அரசமைப்பதற்கு தான் கொள்கையளவில் இணங்கியிருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று முன்தினம் (27) அறிவித்தார்.

இது சம்பந்தமாக பேச்சு நடத்துவதற்கு வருமாறு, ஆளுங்கட்சி மற்றும் நாடாளுமன்றத்தில் சுயாதீன அணிகளாக செயற்படும் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

ஆளுங்கட்சி மற்றும் சுயாதீன அணிகளுடன் முதற்கட்டமாக பேச்சு நடத்திய பின்னர், பிரதான எதிர்க்கட்சி உட்பட ஏனைய தரப்புகளுக்கும் அழைப்பு விடுக்கவே ஜனாதிபதி உத்தேசித்திருந்தார்.

எனினும் ஜனாதிபதியும், அவர் தலைமையிலான அரசும் பதவி விலகும்வரை, சர்வக்கட்சி அரசு என்ற கட்டமைப்பை ஏற்கமுடியாது என சஜித் பிரேதமாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆகியன அறிவித்துவிட்டன.

இவ்விரு விடயங்களும் இடம்பெறும்வரை, சர்வக்கட்சி அரசுக்கு தாமும் தயாரில்லை என ஐக்கிய தேசியக்கட்சி நேற்று அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பையேற்று கலந்துரையாடலில் பங்கேற்பதா அல்லது எத்தகையதொரு நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக 11 கட்சிகளின் கூட்டணியும், அநுரபிரயதர்சன யாப்பா தலைமையிலான சுயாதீன அணியும் மைத்திரிபால சிறிசேனவின் இல்லத்தில் கூடி ஆராய்ந்தன.

அரசுக்கு ஆதரவு வழங்கி இராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட சாந்த பண்டார, சுரேன் ராகவன் ஆகிய இருவரையும் ஜனாதிபதி பதவி நீக்காவிட்டால், சந்திப்பில் பங்கேற்கப்போவதில்லை என சுதந்திரக்கட்சியினர் தெரியப்படுத்தியுள்ளனர்.

கட்சியின் மத்திய குழுவும் இந்த முடிவை எடுத்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர். எனினும், சுதந்திரக்கட்சி கட்டாயம் பங்கேற்க வேண்டுமென 10 கட்சிகள் விடுத்த அழைப்பையேற்று, முடிவை மாற்றி சந்திப்பில் பங்கேற்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Recent News