Thursday, November 14, 2024
HomeLatest Newsசிக்ஸர் ஒன்றை விளாசி இந்தியாவை வீட்டுக்கு அனுப்பியது இங்கிலாந்து

சிக்ஸர் ஒன்றை விளாசி இந்தியாவை வீட்டுக்கு அனுப்பியது இங்கிலாந்து

2022ஆம் ஆண்டுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து அணி தெரிவாகியுள்ளது.

இந்திய அணியுடனான, இன்றைய இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்திய அணிசார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஹர்திக் பாண்டியா 63 ஓட்டங்களை பெற்ற நிலையில், சர்வதேச இருபதுக்கு20 போட்டிகளில் தனது மூன்றாவது அரைச்சதத்தை பூர்த்திசெய்தார்.

அவர் 33 பந்துகளில் 4 நான்கு ஓட்டங்கள், 5 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 63 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன், விராட் கோலி 50 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக்கொடுத்தார்.விராட் கோலி 40 பந்துகளில் 4 நான்கு ஓட்டங்கள், ஒரு ஆறு ஓட்டம் அடங்கலாக 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் கிறிஸ் ஜோர்டன் 43 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களையும், ஆதில் ரஷித் 20 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும், கிறிஸ் வோக்ஸ் 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 3 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

  169 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 16 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது.

இங்கிலாந்து அணிசார்பில் அதிகபடியாக அலெக்ஸ் ஹெல்ஸ் 86 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

சர்வதேச இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளில் இவர் பெற்ற 12ஆவது அரைச்சதம் இதுவாகும்.

அலெக்ஸ் ஹெல்ஸ் 47 பந்துகளில் 04 நான்கு ஓட்டங்கள் 07 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 86 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

அத்துடன், ஜோஸ் பட்லர் 80 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.ஜோஸ் பட்லர் 49 பந்துகளில் 09 நான்கு ஓட்டங்கள், 03 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 80 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்த இன்னிங்ஸில் மொத்தமாக 04 உதிரி ஓட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.

முன்னதாக, 2022ஆம் ஆண்டுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்திய பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

இன்றைய போட்டியில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தெரிவானது.

இதன்படி, இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.

பிற செய்திகள்

Recent News