Friday, November 22, 2024
HomeLatest Newsவடக்கில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை: பின்னணியில் செயற்படுபவர்கள் யார்?- சுரேஷ் கேள்வி!

வடக்கில் அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை: பின்னணியில் செயற்படுபவர்கள் யார்?- சுரேஷ் கேள்வி!

கடற்படைக்கென தனியான புலனாய்வுப் பிரிவு, இராணுவத்திற்கென தனியான புலனாய்வுப் பிரிவு,பொலிஸ் புலனாய்வு பிரிவு, பயங்கரவாத தடைப் புலனாய்வு பிரிவு என பல்வேறு புலனாய்வு பிரிவினர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் பரவலாக நிறைந்து போயிருக்க போதைப்பொருள் இங்கு வருகின்றது என்றால் புலனாய்வு பிரிவினர் என்ன செய்கின்றார்கள் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பினார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் போதைவஸ்து பாவனை என்பது யுத்தத்துக்கு பின்னரே அறிமுகமானது. இன்றுவரையும் யாழ்ப்பாணம் முப்படையினுடைய கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றது. இங்கு யார் என்ன செய்தாலும் படையினருக்கு உடனடியாகவே தகவல்கள் தெரியும்.

மஞ்சள் கடத்தப்படும் போது உடனடியாக பிடிக்கப்படுகின்றது. வேறு பொருட்கள் வரும்போது உடனடியாக கடத்தல் குழு பிடிக்கப்படுகிறது. ஆனால் போதைவஸ்து வரும் போது அவ்வாறான நிலை காணப்படுவதில்லை.

கஞ்சா வரும்போது  200 கிலோ 300 கிலோ பிடிபடும்போது அதே நேரத்தில் வெளிப்பிரதேசத்தில் பெருந்தொகை கஞ்சா வருவதாக அறியப்படுகிறது.

கடற்படையினர் இந்திய மீனவர்கள் வரக்கூடாது என்பதற்காக பல ரோந்து நடவடிக்கையை ஈடுபட்டிருக்கின்றனர். இந்திய மீனவர்கள் படகுகளுடன் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.இலங்கை கடற்படை திறமையாக செயல்படும்போது கேரள கஞ்சாவை இங்கு தடை செய்வது என்பது அவ்வளவு கடினமான விடயம் அல்ல.

கெக்கோயின்,ஹெரோயின், ஐஸ் போன்ற பல்வேறு போதைப்பொருட்கள் தென்பகுதியில் இருந்து  யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்திற்கு தாராளமாக வருகின்றது. ஆனையிறவு சோதனைச்சாவடி, வவுனியா சோதனைச் சாவடிகளை தாண்டி மிகப் பெருமளவிலான போதைவஸ்துக்கள் வருவதுடன் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் விநியோகம் செய்யப்படுகிறது.

யாழ்ப்பாணத்து வீதிகளில் சோதனைச் சாவடிகளை போடுவதால் போதைவஸ்துகளை நிறுத்திவிட முடியாது. கொழும்பிலிருந்து வரும் போதைவஸ்துகளை  தடுப்பதும் இந்தியாவில் இருந்து வரும் போதைவஸ்துகளை தடுப்பதற்கும்  இராணுவத்தை வீதியில் போடுவதால் நிறுத்தி விட முடியாது. பிரதான வீதிகளில் சாவடிகளை போட்டால் உள்வீதிகள் எவ்வாறு செல்ல முடியும் என்பது அனைவருக்கும் தெரியும்.

போதைவஸ்தை இல்லாமல் செய்வது நோக்கமா? சோதனைச்சாவடியை போடுவது நோக்கமா என்ற கேள்வி எழுகிறது. மீண்டும் இங்கு சோதனை சாவடிகள் அமைப்பது சாதாரண மக்களை பாதிக்கும்.

வடமாகாண ஆளுநர் மக்கள் பிரதிநிதிகளாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை பிரதிநிதிகளை அழைத்துப் பேச முடியும். கூட்டாக துறை சார்ந்த தரப்புகள் இணைந்தே பேச முடியும்.

பொலிசாருக்கும் இராணுவத்திற்கும் போதைப்பொருள் தொடர்பான தகவல் கிடைத்தால் சம்பந்தப்பட்ட போதைப்பொருள் வியாபாரிகளுக்கு தகவல் வந்துவிட்டதாக தகவல் போகின்றது. யாரும் இவர்களை நம்பி  போய் தகவல் சொல்வது கடினம்.

அவ்வளவு விரைவாக போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு செய்திகள் செல்கின்றது. போதைப்பொருள் வியாபாரிகள் தனித்து செய்கின்றார்களா அல்லது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் தரப்பின் பாதுகாப்புடன் செய்கின்றார்களா என்ற கேள்வி எழுகின்றது.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்படுபவர்களுக்கு என்ன நடக்கின்றது என்பது தெரியவில்லை. அவர்களுக்கு என்ன அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்படுகிறது என்பது தெரியவில்லை. அவர்கள் எவ்வாறு வெளியில் வருகிறார்கள் என்ற கேள்வி எழுகின்றது – என்றார்.

பிற செய்திகள்

Recent News