Tuesday, April 30, 2024
HomeLatest NewsWorld Newsதொடரும் எல்லை தாண்டல் - பதற்றத்தில் தைவான்..!

தொடரும் எல்லை தாண்டல் – பதற்றத்தில் தைவான்..!

கிழக்கு ஆசியாவில் உள்ள தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதி என்று சீனா, நீண்டகாலமாக சொந்தம் கொண்டாடி வருகிற நிலையில் இதனை ஏற்க மறுத்து தைவான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இவ்விவகாரத்தில் தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளதால் கடுங்கோபத்தில் உள்ள சீனா சில மாதங்களுக்கு முன்பு தைவானை சுற்றியுள்ள கடற்பகுதியில் அத்துமீறி போர் பயிற்சிகளை மேற்கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமையிலிருந்து திங்கட்கிழமை வரையில் 103 போர் விமானங்களை கொண்டு போர் பயிற்சியை தைவானின் வான் பகுதியில் சீனா மேற்கொண்டதோடு நேற்றிலிருந்து இன்று வரை மேலும் 55 போர் விமானங்களின் பயிற்சியை மேற்கொண்டும் தைவானை சுற்றியுள்ள கடற்பகுதியில் 7 போர்கப்பல்களை கொண்டு பயிற்சியிலும் ஈடுபட்டது.

அவற்றில் அதிகமான விமானங்கள், சீனாவையும் தைவானையும் பிரிக்கும் தைவான் ஜலசந்தி பகுதியின் மத்திய எல்லை கோட்டை தாண்டி, தைவானின் தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வான் பாதுகாப்பு அடையாள எல்லை வரை நுழைந்ததாக தைவான் அறிவித்திருக்கிறது.
இதனையடுத்து, போர் பதட்டத்தை தூண்டி வருவதாக சீனா மீது தைவான் மீண்டும் குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கிடையில், போர் விமானங்களின் பயிற்சி குறித்து கருத்து தெரிவிக்காத சீன வெளியுறவுத்துறை, “தைவான், சீனாவிற்கு சொந்தமானது” என மீண்டும் வலியுறுத்தியுள்ளது. மேலும், தைவான் குறிப்பிடும் மத்திய எல்லைக்கோட்டு பகுதி என எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

Recent News