மோசடிக்காரர்களிடம் இருந்து இழந்த பணத்தை திரும்ப பெற உடனடியாக சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண்ணான 1930க்கு அழைத்து புகாரளிக்கலாம்.
ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களிடம் பிரபலமாக இருக்கிறது வாட்ஸ் அப் செயலி, வாட்ஸ் அப் செயலி மூலம் நமது உறவினர்கள், நண்பர்கள், தொழில் ரீதியாக என அனைத்து விதமான உரையாடல்களையும் அதில் செய்ய முடியும். வாட்ஸ் அப் செயலியில் மெசேஜ் செய்வது மட்டுமின்றி, ஆடியோ அழைப்பு, வீடியோ அழைப்பு, புகைப்படம், வீடியோ, டாக்குமெண்ட் அனுப்புவது என அனைத்தையும் செய்துகொள்ளலாம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வாட்ஸ் அப்பில் பல்வேறு அப்டேட்டுகள் வந்துகொண்டே இருக்கிறது.
ஆனால் இந்த பிரபலமான செயலியின் மூலம் சில மோசடி கும்பல் சில மோசடி செயல்களில் ஈடுபட்டு நமது பணத்தை பறிக்கின்றனர். லின்க் அனுப்புவது, வங்கி தகவல்களை கேட்பது என பல மோசடிகளை செய்து வருகின்றனர், தெரியாதவர்களுக்கு வாட்ஸ்அப்பில் வீடியோ கால் செய்வது அந்த அழைப்பை ஆண் எடுத்தால், அந்த வீடியோ அழைப்பில் மோசடி கும்பலின் அருகில் நிர்வாணமாக பெண் தோன்றுவது, அதுவே ஒரு பெண் அழைப்பை எடுத்தால் அதில் ஆண் நிர்வாணமாக தோன்றுவது என்பது போன்ற மோசடிகள் நடைபெற்று வருகிறது.
இதுபோன்று வரும் வீடியோ அழைப்புகளை நாம் ஏற்கும்போது அதனை மோசடி கும்பல் பதிவு செய்து பின்னர் நம்மை அந்த பதிவை வைத்து மிரட்டி குறிப்பிட்ட தொகையை பறித்துவிடுகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் இதுபோன்ற மோசடியால் ஒருவர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்,
வாட்ஸ்அப் நிர்வாண வீடியோ அழைப்பு மோசடிக்கு ஆளான பிறகு மோசடிக்காரர்களிடம் ரூ.1.57 லட்சத்தை இழந்திருக்கிறார். பின்னர் அவர் தந்திரமாக செயல்பட்டு உடனே சைபர் கிரைம் ஹெல்ப்லைன் 1930 என்கிற எண்ணுக்கு அழைத்து தனக்கு நேர்ந்த சம்பவம் பற்றி புகார் அளித்தார். பின்னர் போலீசார் ரூ.90,140 மற்றும் ரூ.49,000 மதிப்புள்ள இரண்டு பரிவர்த்தனைகளையும் தடுத்து பாதிக்கப்பட்ட நபருக்கு பணத்தைத் திரும்ப கொடுத்திருக்கின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய போலீசார் மக்கள் மோசடிகளில் சிக்கிவிடாமல் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். அதுமட்டுமின்றி மெசேஜ்கள் மற்றும் மெயில்கள் மூலம் வரும் தெரியாத லிங்கை கிளிக் செய்ய வேண்டாம் என போலீசார் மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
மேலும், இதுபோன்ற மோசடிகளில் மாட்டிக்கொண்டால் மோசடிக்காரர்களிடம் இருந்து பணத்தை திரும்ப பெற உடனடியாக சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண்ணான 1930க்கு அழைத்து புகாரளிக்கலாம் என்றும் தேவைப்பட்டால் எஃப்ஐஆர் பதிவு செய்யுங்கள் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.
பிற செய்திகள்