ஜெருசலேமின் பழைய நகர் அருகே உள்ள காவல் நிலையம் வெளியே, இஸ்ரேல் எல்லை காவல் படையை சேர்ந்த பெண் காவல் அதிகாரி எலிஷேவா ரோஸ் இடா லுபின் (வயது 20)என்பவர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அப்போது, 16 வயது பாலஸ்தீனிய சிறுவன் ஒருவர், திடீரென அவர் மீது தாக்குதல் நடத்தினார். அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த லுபின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டார்.
இந்த தாக்குதல் சம்பவத்தில், லுபினுடன் பணியில் இருந்த மற்றொரு காவல் அதிகாரிக்கும் காயமேற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த தாக்குதலில், பாலஸ்தீனியருக்கு உதவியாக செயல்பட்ட மற்றொரு நபர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் என இரு நாட்டு குடிமகளான லுபின், 2021-ம் ஆண்டு இஸ்ரேலுக்கு புலம்பெயர்ந்துள்ளார். இந்நிலையில், பலஸ்தீனியரின் தாக்குதலில் அவர் உயிரிழந்து விட்டார். இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு தாக்குதல் தொடங்கியதில் இருந்து இதுவரை மொத்தம் 59 காவல் அதிகாரிகள் உயிரிழந்து உள்ளனர்.