Saturday, May 11, 2024
HomeLatest NewsWorld Newsமனிதாபிமான முறையில் போர் நிறுத்தம் - இஸ்ரேல் பிரதமருடன் ஜோபைடன் அவசர ஆலோசனை..!

மனிதாபிமான முறையில் போர் நிறுத்தம் – இஸ்ரேல் பிரதமருடன் ஜோபைடன் அவசர ஆலோசனை..!

இஸ்ரேல் ஹமாஸ் போரில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்காவும் போரை உடனே நிறுத்துவதற்கான முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் நிரந்தர போர் நிறுத்தத்துக்கு பிடி கொடுக்காமல் இஸ்ரேல் பேசி வருகிறது.


அமெரிக்க வெளியுறவு துறை மந்திரி ஆண்டனி பிளிங்கனும் 2 முறை இஸ்ரேல் சென்று அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை சந்தித்து பேசினார். ஆனாலும் இஸ்ரேல் போரை வைவிட மறுப்பு தெரிவித்து தொடர்ந்து முப்படைகளின்
தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் தினமும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவசர ஆலோசனை நடத்தியதாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.


காசாவில் பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறும் வரை காசாவில் தற்காலிக போர் நிறுத்தத்தை இஸ்ரேல் பின்பற்ற வேண்டும் என ஜோபைடன் இஸ்ரேல் பிரதமரிடம் வலியுறுத்தினார்.

மேலும் இரு தலைவர்களும் ஹமாஸ் அமைப்பினர் பிடியில் இருக்கும் பிணைக் கைதிகளை பாதுகாப்பாக மீட்பது குறித்தும் விவாதித்தனர். பிணைக்கைதிகளாக இருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாட்டவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துமாறும், காசாவிற்கு செல்லும் மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்பட்டதை வரவேற்பதாகவும் ஜோபைடன் தெரிவித்தார்.

Recent News