இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற நீதியரசர் ரோஹிணி மாரசிங்கவுடன் இணைந்து பணியாற்ற முடியாதென , ஆணையாளர்கள் மூவரால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க , பிரதமர் தினேஷ் குணவர்தன, நீதி அமைச்சர் விஜேதச ராஜபக்ஷ ஆகியோரிடம் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆணையாளர்களான கலாநிதி விஜித நாணயக்கார, கலாநிதி நிமால் கருணாசிறி மற்றும் கழுபஹண பியரத்ன தேரர் ஆகியோர் கையெழுத்திட்டு இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர் ஆணைக்குழு சட்டத்திற்கு முரணாக செயற்படுவதாகவும் , ஆணைக்குழுவின் ஏனைய உறுப்பினர்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை செவிமடுக்காது தன்னிச்சையாக தான்தோன்றி தனமாக செயற்படுவதாகவும் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆணைக்குழுவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் எடுக்கும் தீர்மானங்களை தொடர்ந்தும் உதாசீனப்படுத்தி செயற்படுவதால் கடந்த பெப்ரவரி மாதம் தம்மால் முன்வைக்கப்பட்ட ஆணைக்குழுவின் யோசனைக்கு மார்ச் மாதமாகியும் அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆணைக்குழுவின் தலைவர் ஏனைய உறுப்பினர்களின் கருத்துக்களை செவிமடுக்காமையால் , அவரால் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்திற்கும் அனுமதி வழங்காதிருப்பதற்கு ஏனைய உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
அத்துடன் அவர் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் உயர் பதவியை இலக்காகக் கொண்டே இவ்வாறு செயற்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே இது குறித்து உடனடியாக அவதானம் செலுத்துமாறும் ஆணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவருடன் உறுப்பினர்கள் ஐவர் இருப்பதுடன் , அவர்களில் மூவர் இவ்வாறு தமது கையெழுத்துடன் கடிதம் அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.