Thursday, December 26, 2024
HomeLatest Newsமின் கட்டணம் அதிகரிக்கும் அபாயம்!

மின் கட்டணம் அதிகரிக்கும் அபாயம்!

கோப் குழுவிடம் சமர்பிக்கப்பட்ட தரவுகளின்படி வலுசக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் அண்மையில் முன்வைத்த எரிபொருள் விலைகள் சரியானவை அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேவேளை அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட தற்போதைய எரிபொருள் விலை உண்மையான விலையை விட 200 ரூபா அதிகமாகும் என நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே வெளியிட்டுள்ள அறிக்கையில் ,

தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவுகளின்படி, அரச வரி உள்ளடங்களாக அனைத்து வகையான எரிபொருட்களையும் 300 ரூபாவிற்கு குறைவாக விற்பனை செய்ய முடியும்.

ஆனால் தற்போது மண்ணெண்ணெய் தவிர்ந்த ஏனைய அனைத்து எரிபொருள்களும் 470 ரூபாவுக்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.

அதன்படி பெட்ரோல், டீசல் மூலம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் 200 ரூபாய்க்கு மேல் இலாபம் ஈட்டுவது தெரிகிறது.

இந்நிலையில், இலங்கை மின்சார சபையின் மின் பிறப்பாக்கிகளுக்கு அதிக விலைக்கு எரிபொருள் வழங்கப்படுவதால் மின் கட்டணம் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அப்படியானால் இச்சுமையை நாட்டு மக்கள் சுமக்க நேரிடும்.

எரிசக்தி அமைச்சர் மற்றும் சுங்கத்திணைக்களம் எரிபொருட்களின் விலைகள் தொடர்பாக முன்வைத்த தரவுகளுக்கு இடையில் பாரிய முரண்பாடு காணப்படுகிறது. ஆனால் இது தொடர்பாக கணக்கறிக்கைகளை பார்வையிடுவதற்கு அரசின் தலைமை கணக்காளர் குழு தவறிவிட்டது.

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் சிங்கப்பூர் விலையின் அடிப்படையில் விலைகளை நடைமுறைப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உண்மையில் எரிபொருள் கொள்வனவு செய்யப்படும் நாட்டில் உள்ள எரிபொருளின் விலைக்கேற்ப விலைகள் நிர்ணயிக்கப்பட்ட வேண்டும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அனைத்து வகையான எரி பொருட்களையும் 200 ரூபாவினால் குறைக்க முடியும் என்ற நிலை காணப்படுகின்ற போதிலும், நுகர்வோர் அதிகார சபையும் இது தொடர்பில் மௌனமாக இருக்கிறது.

நான்கைந்து நாட்கள் வரிசையில் நின்று எரிபொருள் பெறும் வாடிக்கையாளர்களின் பணத்தை கொள்ளையடிக்கும் இவ்வாறான நிறுவனங்களை அனுமதித்தால் அதற்கு அரசு நேரடியாக பொறுப்பேற்க வேண்டும்.

எரிபொருளை ஒழுங்குபடுத்துவதற்கு சுதந்திரமான அமைப்பு தேவை என்று நாம் குரல் எழுப்பி பல ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும் இன்றும் கூட எரிபொருளை ஒழுங்குபடுத்துவதற்கு சுயாதீன அமைப்பு நியமிக்கப்படவில்லை.

எரிபொருளின் விலையை ஒழுங்குபடுத்தி உண்மையான விலை தகவல்களை மக்களுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்

Recent News