தென்னாப்பிரிக்காவின் Krugersdorp நகரில் அமைந்துள்ள சுரங்கம் ஒன்றில் 21 சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்களாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
பொலிசார் வெளியிட்டுள்ள தகவலில், புதன்கிழமை மதியத்திற்கு மேல் 19 சடலங்களும் வியாழக்கிழமை பகல் 2 சடலங்களையும் தொடர்புடைய சுரங்கத்தில் இருந்து மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Krugersdorp நகரில் அமைந்துள்ள சுரங்கத்தில் சட்டவிரோதமாக தொழிலாளர்களை ஈடுபடுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு நடுவே குறித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
கடந்த ஜூலை மாதம், கைவிடப்பட்ட சுரங்கத்தினருகே காணொளி ஒன்றை பதிவு செய்து வந்த படக்குழுவினரில் 8 பெண்கள் துஸ்பிரயோகத்திற்கு இலக்கானதுடன்,அவர்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், கடந்த வாரம் 14 ஆண்கள் மீது பலாத்காரம் மற்றும் கொள்ளை தொடர்பான வழக்குகள் பதியப்பட்டது. இவர்கள் அனைவரும் சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் என்றே கூறப்படுகிறது. தற்போது கண்டெடுக்கப்பட்ட சடலங்களும் சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் என்றே பொலிசார் நம்புகின்றனர்.