பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி கப்பலான, யுவான் வாங் 5 இன்று காலை அளவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
கப்பலின் வருகையை முன்னிட்டு, வரவேற்பு விழாவை இலங்கையில் உள்ள சீனத் தூதரகம் நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இலங்கையில் உள்ள சீன தூதரகம் இந்த நிகழ்வை எளிமையான முறையில் நடத்தும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே இந்த கப்பல், கடந்த 11ம் திகதி அம்பாந்தோட்டை சீனக் கட்டுப்பாட்டு துறைமுகத்துக்குள் செல்லவிருந்தபோதும், இந்தியா மற்றும் அமெரிக்காவின் அதிருப்தியினால், தாமதப்படுத்தப்பட்டது.
எனினும் இன்று கப்பல் துறைமுகத்துக்குள் செல்கிறது.
அந்த கப்பலை ஆகஸ்ட் 22 வரை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் இராஜதந்திர வழிகள் மூலம் அரச உயர் மட்டம் நடத்திய விரிவான ஆலோசனையின் பின்னர் இந்த கப்பலுக்கு அனுமதி வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.