இளம் பெண்ணொருவர் தனது இதயத்தை தானே டப்பாவில் பார்த்த சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த வினோத சம்பவம் பிரிட்டன் தலைநகர் லண்டனில் நடந்துள்ளது.
ஹாம்ப்ஷயரில் உள்ள ரிங்வுட் பகுதியைச் சேர்ந்த ஜெனிஃபர் சுட்டன் என்ற பெண்ணே , லண்டனில் உள்ள ஹன்டேரியன் அருங்காட்சியகத்திற்குச் சென்று தனது இதயத்தைப் பார்த்துள்ளார்.
பிரிட்டனைச் சேர்ந்த சுட்டன் முதன் முதலில் மலைகளில் நடக்கும் போதும் உடற்பயிற்சி செய்யும் போதும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளார். அப்போது அந்த பெண்ணுக்கு 22 வயதே ஆகி இருந்தது. பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார். அந்த பெண்ணுக்கு நடந்த மருத்துவ சோதனையில், கார்டியோமயோபதி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதையடுத்து கடந்த 2007ஆம் ஆண்டு அந்த பெண்ணுக்கு மிகவும் பொருத்தமான இதயம் கண்டுபிடிக்கப்பட்டு உயிர் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து சுட்டன் தனது இதயத்தைக் காட்சிக்காகப் பயன்படுத்த அனுமதித்த நிலையில், இதயம் ஹோல்போர்னில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. உடல் உறுப்பு தானத்தை ஊக்குவிக்கவே அவர் அருங்காட்சியகத்தில் தனது இதயத்தை வைக்கச் சம்மதித்துள்ளார்.
பல ஆண்டுகளாக தனக்குள் இருந்த இதயத்தைப் பார்ப்பதை தன்னால் நம்பவே முடியவில்லை என்றும் அதை ஒரு பெரும் அதிசயம் என்றும் அந்த பெண் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்த பெண் மேலும் கூறுகையில், “நான் முதலில் உள்ளே நுழைந்த போது, பல ஆண்டுகளாக அது எனக்கு இருந்த ஒன்று தானே என்றே யோசித்தேன்.ஆனால் அதுவும் கூட மிகவும் நன்றாக இருந்தது.
அது என்னை 22 வருடங்கள் உயிரோடு வைத்திருந்தது. நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். நான் என் வாழ்நாளில் டப்பாவுக்குள் நிறைய விஷயங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் எனது இதயத்தையே அப்படிப் பார்ப்பது மிகவும் வித்தியாசமாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.