வாழைச்சேனைப் பிரதேசத்தில் கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையங்களில் போலியான ஆப் பயன்படுத்தி ஒன்லைன் மூலமான பணப் பரிமாற்றம் செய்வதாக தெரிவித்து,பல இலட்சம் ரூபா பெறுமதியான செல்போன்களை கொள்வனவு செய்த இளம் ஜோடி பொலிஸாரிடம் சிக்கியுள்ளது.
ஒன்லைனில் பணப் பரிமாற்றம் செய்கின்றோம் என தெரிவித்து, கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்து மோசடியில் ஈடுபட்ட பொலன்னறுவை பகுதியை சேர்ந்த கணவன் மனைவி ஆகிய இருவரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பல கையடக்க தொலைபேசி விற்பனை நிலையங்களுக்கு, கணவன் மனைவி ஜோடியாக சென்று ,செல்போன்களை கொள்வனவு செய்து, ஒன்லைன் மூலம் பணப்பரிமாற்றம் செய்வதாக போலியான,ஆப் பதிவுகளை காட்டிவிட்டு கையடக்கத் தொலைபேசியை வாங்கி கொண்டு மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் ஒன்லைன் ஊடாக வங்கி கணக்குக்கு பணப் பரிமாற்றம் நடைபெறவில்லை என அறிந்துகொண்ட செல் போன் கடை உரிமையாளர்கள்,பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததை அடுத்து, மேற்கொண்ட விசாரணைகளில் 26 மற்றும் 21 வயதுடைய குறித்த தம்பதிகள் சிக்கியுள்ளனர்.
இந்த நிலையில் இவ்வாறு வாங்கிய கையடக்க தொலைபேசிகளை , மோசடி செய்யப்பட்ட பிரதேசத்தில் உள்ள தனது உறவினரின் கடையில் விற்பனை செய்துள்ளதாக, ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.