Monday, January 27, 2025
HomeLatest Newsமறுப்பின் அடிப்படையில் பொய்யாக வாழ்வதை நிறுத்துமாறு உலக தமிழர் பேரவை கோரிக்கை

மறுப்பின் அடிப்படையில் பொய்யாக வாழ்வதை நிறுத்துமாறு உலக தமிழர் பேரவை கோரிக்கை

இலங்கையில் உள்ள அனைத்து சமூகங்களும் மறுப்பின் அடிப்படையில் பொய்யாக வாழ்வதை விட்டுவிட்டு சாட்சியங்களின் அடிப்படையில் உண்மையைக் கண்டறிய வேண்டும் என உலக தமிழர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 6 ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை, உலக தமிழர் பேரவை வரவேற்றுள்ளது.

நீதி மறுக்கப்பட்ட இலங்கையில் கடுமையான மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு, நீதியைப் பெறுவதற்கான செயல்முறை மிகவும் மெதுவாகவும் கடினமாகவும் இருந்தாலும், இந்த தீர்மானம் நம்பிக்கையளிக்கின்றது என பேரவை குறிப்பிட்டுள்ளது.

தீர்மானத்தின் படி, போர்க்கால பொறுப்புக்கூறலில் இலங்கை முழுமையான தோல்வியை அடைந்துள்ளது.

தகவல் மற்றும் ஆதாரங்களை சேகரித்தல், ஒருங்கிணைத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பாதுகாத்தல் மற்றும் எதிர்கால பொறுப்புக்கூறல் செயல்முறைகளுக்கான உத்திகளை உருவாக்குதல் ஆகியவற்றுக்கான, மனித உரிமைகள் பேரவையின் திறனை விரிவுபடுத்தி வலுப்படுத்தியுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழ், முஸ்லிம் சமூகங்கள் எதிர்கொள்ளும் சுதந்திரமின்மை மற்றும் ஓரங்கட்டப்படல் போன்றவற்றை ஏற்று, அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான அர்ப்பணிப்பை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமெனவும், குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாண சபைகள் உட்பட அனைத்து மாகாண சபைகளையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தீர்மானம் கோரியுள்ளது.

பொறுப்பற்ற நிர்வாகம், ஆழமடைந்து வரும் இராணுவமயமாக்கல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான தண்டனையின்மை ஆகியவை இறுதியில் இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்தது என்பதையும் தீர்மானம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் முடிவுகளை முக்கியமாக தமிழ் சமூகம் ஆவலுடன் எதிர்பார்க்கும் கடந்த ஆண்டுகளைப் போலன்றி, இந்த ஆண்டு ஆர்வங்களும் எதிர்பார்ப்புகளும் மிகவும் பரவலாக இருந்தன.

இந்த நிலையில், இலங்கையின் அனைத்து மக்களும் சமமான குடிமக்கள் மற்றும் சமூகங்களாக ஒன்றிணைவதற்கு, எல்லாச் சமூகங்களும் மறுப்பின் அடிப்படையில் பொய்யாக வாழ்வதை விட்டுவிட்டு, ஆதாரத்தின் அடிப்படையில் உண்மையைப் புரிந்து கொள்ளும்போதுதான் முன்னேற்றம் சாத்தியமாகும் என உலக தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

Recent News