யாழில் பிரதேச சபையின் தவிசாளர் ஒருவரின் வீட்டின் முன்னால் ஒரு பெண் தீவைத்து உயிரை மாய்த்திருந்த நிலையில் அனைத்து ஊடகங்களும் இதன் பின்னணியை மூடி மறைத்துள்ளதாக தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
‘பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டம்’ என்ற தொனிப்பொளில் யாழ். நல்லூர் இளங்கலைஞர் மன்றத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
குறித்த தவிசாளர் பிரபல கட்சி ஒன்றின் பிரமுகர் என்றும் இதன் காரணமாகவே அனைத்து ஊடகங்களும் இதன் பின்னணியை மூடி மறைத்துள்ளதாகவும் இதே சாரதாரண நபர் ஒருவரின் வீட்டின் முன்பு இவ்வாறு நடைபெற்றிருந்தால் அனைத்து ஊடகங்களும் முண்டியடித்து பின்னிணை துலக்கியிருப்பார்கள் என்றும் ஐங்கரநேசன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இன்று அந்த சம்பவம் காற்றோடு காற்றாக போய்விட்டதாகவும் ஊடகங்களும் அதனை அடக்கிவாசித்துள்ளதாகவும் ஐங்கரநேசன் குறிப்பிட்டள்ளார்.
தமிழ் அரசியல் வாதிகள் இதயசுத்தியானவர்களாக இருந்திருந்தால் குறித்த உறுப்பினரை விசாரணை முடியும் வரை கட்சியில் இருந்து இடைநிறுத்துவதாக அறிவித்திருக்க வேண்டும் என்றும் ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார்.
இன்று பிஞ்சு குழந்தைகளின் கைகளில் போதைபொருள் என்ற நஞ்சு திணிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஐங்கரநேசன் தமிழ் அரசியல் வாதிகளில் எந்த அரசியல்வாதி தான் போதை பாவிக்கவில்லை என்று துணிந்து செல்வார்களா என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.