பிரித்தானியாவின் புதிய பிரதமராக அண்மையில் பதவியேற்றுள்ள பெண்மணி “லிஸ் ரஸ்” நேற்றைய தினம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் சீனாவைக் குறித்த தமது புதிய நிலைப்பாட்டை தெளிவாக விளக்கியுள்ளார்.
சீனாவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையில் அண்மைக் காலமாக இடம் பெற்ற வருகின்ற பனிப்போரை முடிவுக்கு கொண்டு வர விரும்புவதாகவும் பிரதமர் தனது உரையில் தெரிவித்திருக்கின்றார்.
மேலும் அவர் தனது உரையில் தெரிவித்ததாவது, “சீனாவிற்கும் பிரித்தானியாவிற்குமான உறவு நிலையில் சில மாற்றங்களை ஏற்படுத்த எண்ணியுள்ளோம்.
சீனா எமது எதிரியோ அல்லது எமக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஒரு நாடோ அல்ல மாறாக நாம் சீனாவை எமக்கான ஒரு போட்டியாளராகவே பார்க்கின்றோம். சீனாவின் மேல் மேற்குலகினால் விதிக்கப்பட்டுள்ள தடைகள் எமது பொருளாதார வளர்ச்சியில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.
குறிப்பாக சீனாவின் பல தொழிநுட்ப நிறுவனங்கள் பிரித்தானியாவில் தொழிற்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால் பிரித்தானியாவின் பொருளாதரத்தில் தளும்பல் நிலை ஏற்பட்டுள்ளது.
சீனாவின் சில செயற்பாடுகள் நிச்சயம் கண்டிக்கத்தக்கவையாகவே இருக்கின்றது. குறிப்பாக சீனாவில் ‘உய்குர்’ முஸ்லிம் இன மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் மனித உரிமைகள் மீறல் மற்றும் தாய்வானுக்கு எதிரான சட்ட விரோத செயற்பாடுகள் என்பன குறித்த கண்டிப்புக்களை நாம் விடுக்க வேண்டும்.
எனவே சீனாவை ஒரு எதிரியாக பார்க்காது எமது போட்டியாளராக பார்ப்பதுடன் சீனாவின் தொழிநுட்ப மற்றும் இதர வர்த்தக பரிமாற்றங்களை எமது வளர்ச்சிக்கு உதவும் வகையில் தேர்வு முறையில் நாம் அவர்களை உள்வாங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்” என பிரித்தானியாவின் புதிய பிரதமர் ‘லிஸ் ரஸ்’ தனது உரையின் போது குறிப்பிட்டிருந்தார்.