சுமார் 50,000 ஆண்டுகள் உறைந்த நதியில் சிக்கியிருந்த zombie வைரஸ் ஒன்றை அறிவியலாளர்கள் உயிர் பெறச் செய்துள்ள நிலையில், மீண்டும் ஒரு கொள்ளைநோய் உருவாகலாம் என்ற புதிய அச்சம் ஒன்று உருவாகியுள்ளது.
உயரும் வெப்பநிலையால் உருகும் உறைந்த பகுதிகள் பயங்கர வைரஸ்களை வெளிக்கொணராலாம்
புவி வெப்பநிலை உயர்ந்துவரும் நிலையில், அதிகரிக்கும் வெப்பத்தால் ஏற்கனவே உறைந்திருந்த பகுதிகள் உருகுவதால், மேலும் பல உயிர்க்கொல்லி வைரஸ்கள் வெளிவரலாம் என நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
பிரான்சிலுள்ள Aix-Marseille பல்கலையைச் சேர்ந்த அறிவியல் ஆய்வாளர்கள் குழு ஒன்று, ரஷ்யாவின் சைபீரியாவில் உருகும் உறைந்த பகுதிகளிலிருந்து, pandoravirus என்னும் புராதன வைரஸ் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது.
அந்த வைரஸ், வட துருவத்தில், Yakutia என்ற இடத்தில் அமைந்திருக்கும் 48,500 ஆண்டுகளாக உறைந்த நிலையில் காணப்படும் ஏரி ஒன்றின் அடியிலுள்ள நிலப்பகுதியில் மறைந்துகிடந்துள்ளது.
இப்படி உயிருடன் மீட்கப்பட்ட வைரஸ்களிலேயே இந்த pandoravirusதான் பழமையான வைரஸ் என கருதப்படுகிறது.
ஆனால், இந்த வைரஸ் ஒற்றை செல் கொண்ட உயிரினங்களை மட்டுமே தாக்கும், அதனால் மனிதர்களுக்கு அபாயம் இல்லை என கருதப்படுகிறது.
என்ன பிரச்சினை உருவாகலாம்?
இந்த pandoravirusஆல் மனிதர்களுக்கு உடனடி பிரச்சினை எதுவும் இல்லை என நம்பப்பட்டாலும், வட துருவத்தின் நிலப்பகுதியில் ஐந்தில் ஒரு பாகம் நிரந்தரமாக உறைந்தே கிடக்கும் நிலையில், அது உருகுமானால், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உறங்கிக்கிடக்கும் பல பயங்கர உயிர்க்கொல்லி நுண்ணுயிரிகள் வெளிப்படலாம் என அறிவியலாளர்கள் அஞ்சுகிறார்கள்.
இத்தகைய கண்டுபிடிப்புகள் அபூர்வம் என்றும், இந்த zombie வைரஸ்களால் மனிதர்களுக்கு ஆபத்து இல்லை என்றும் எண்ணிவிடக்கூடாது என எச்சரிக்கிறார்கள் அவர்கள்.
இதற்கிடையில், இதுபோல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புதைந்துகிடக்கும் பழங்கால விலங்குகளின் உடல்களில் ஆய்வு செய்யும் ரஷ்ய அறிவியலாளர்கள், தவறுதலாக ஒரு கொடிய கொள்ளைநோயை வெளிக்கொணர்ந்துவிடலாம் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது.
ஏனென்றால், இப்படி உறங்கிக்கொண்டிருக்கும் வைரஸ்களைக் கொண்ட, இறந்துகிடக்கும் விலங்குகளின் உடல்களில் ஆய்வு மேற்கொள்ளும்போது, அவற்றிலிருந்து உயிருள்ள விலங்குகளுக்கு நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
இந்நிலையில்,பெரிய வைரஸ் தொற்று ஒன்று விரைவில் பரவுவதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.
எடின்பர்க் பல்கலைப் பேராசிரியரான Mark Woolhouse என்னும் அந்த தொற்றுநோயியல் நிபுணர், ‘Disease X’ என்னும் ஒரு பயங்கர நோய் பரவக் காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
அந்த நோய், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு நோயாக இருக்கலாம் என அறிவியலாளர்கள் கருதுவது குறிப்பிடத்தக்கது.