இலங்கையிலுள்ள அனைத்து சைவ மக்களும் அலையலையாக திரண்டு வெடுக்குநாறி ஆதிசிவன் கோவிலின் வளர்ச்சிக்கும், இந்த ஆலயத்தின் வழிபாட்டு உரிமையை நிலை நிறுத்துவதற்கும் உடனடியாக களத்தில் இறங்கவேண்டுமென வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இனந்தெரியாத நபர்களினால் அழிக்கப்பட்ட விக்கிரங்கள் நேற்று வெடுக்குநாறி மலையில் பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்த நிலையில் ஊடகங்களுக்கு அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இலங்கையில் பல இலட்சம் கிலோ மீற்றர் அளவிலான காடுகள் காணப்படுவதாகவும் ஆனால் அங்கு எல்லாம் பொலிஸ்காவல் அமைக்கப்படவில்லை என்றும் குறிப்பாக தமிழ் பிரதேசங்களிலுள்ள இடங்களை குறிவைத்து தமிழ் மக்களுக்கு எதிராகவே பொலிசார் ஈடுபடுவதாகவும் சி.சிவமோகன் குற்றம் சுமத்தியுள்ளார்.
வெடுக்குநாறி கோவிலின் வழிபாட்டு உரிமையை தடுக்க முடியாது என நீதிமன்றம் தெரிவித்த நிலையில் பொலிசார் மற்றும் தொல்லியல் திணைக்களத்தில் செயற்காடுகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும் என்றும் சி.சிவமோகன் மேலும் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் எழுத்தப்பட்ட மை காய்வதற்கு முன்னரே வெடுக்குநாறி மலைக்கு வருபவர்கள் மற்றும் செல்பவர்களின் பெயர் விபரங்கள் பதிவு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.