இலங்கையில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தொழிகளுக்காக இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
அதன்படி இலங்கையில் இவ்வருடம் முதல் ஏழு மாதங்களில் சுமார் 6 இலட்சம் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை தேடும் மற்றும் பணிக்காக வெளிநாடு செல்லவுள்ளோருக்கும் அவசர அறிவுறுத்தலொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி வெளிநாடுகளுக்கு சுற்றுலா விசா மூலம் சென்று பின்னர் அதனை வேலை விசாவாக மாற்றி தொழில்களில் அமர்த்தப்படுவது குறித்து மிகவும் அவதானமாக இருக்குமாறு தேசிய ஆட்கடத்தல் தடுப்பு செயலணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் குறித்த செயலணியின் அறிவுறுத்தலில், இலங்கையில் உள்ள சில வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் வெளிநாட்டுக்கு ஊழியர்களை சுற்றுலா விசாவின் கீழ் பல்வேறு நாடுகளுக்கு அனுப்புவதுடன், பின்னர் அவற்றை வேலை விசாவாக மாற்றலாம் என்றும் கூறுகின்றனர்.
இதனால் குறித்த தொழிலாளர்கள் ஆட்கடத்தலுக்கு பலியாகி வருவதாக எமக்கு தெரியவருகிறது. குறிப்பாக மலேசிய குடிவரவு அதிகாரிகள் சுற்றுலா விசா வைத்திருப்பவர்களை சோதனை செய்ய கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
கடந்த சில மாதங்களாக, நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படாத வெளிநாட்டு குடியேற்றவாசிகள் வாராந்தம் சுமார் 20 பேர் என்ற அடிப்படையில் விமான நிலையத்திலிருந்து நேரடியாக இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மலேசியாவை விட்டு வெளியேறுவதற்காக வழங்கப்பட்டிருந்த பொது மன்னிப்பு காலம் 2022 ஜூன் மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைந்துள்ளது. மேலும் மலேசியாவில் உள்ள சட்ட நடைமுறைப்படுத்தல் முகவர்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் சோதனைகள் மூலம் செல்லுபடியாகும் விசா இல்லாத வெளிநாட்டினரைக் கைது செய்து சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
குறித்த குடியேற்றவாசிகள் விடுவிக்கப்பட்ட பின்னர் தங்களது சொந்த செலவில் அவர்கள் நாடுகடத்தப்படும் வரை அங்குள்ள குறிப்பிட்ட தடுப்பு தடுப்பு மையத்தில் வைக்கப்படுவார்கள்.
ஏமாற்றப்பட்டு மலேசியாவிற்கு அனுப்பப்படும் தொழிலாளர்கள் மோசடியான வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களால் மிகவும் மனிதாபிமானமற்ற நிலைமைகளின் கீழ் மிகக்குறைந்த சம்பளத்திற்கு மற்றும் எந்தவிதமான தொழில் உத்தரவாதமும் இன்றி வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படுவதாக எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
குறிப்பாக “மலேசியாவுக்கான பயண விசாக்களை அந்த நாட்டிற்கு சென்றவுடன் வேலை விசாவாக மாற்ற முடியாது” என்பதை மனதில் கொண்டு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை தேடும் அனைத்து வருங்கால குடியேற்றவாசிகளையும், சட்டபூர்வமான மற்றும் உண்மையான வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட முகவர் நிலையங்கள் மூலம் செல்லுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.