Wednesday, January 22, 2025
HomeLatest Newsயாழ் பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான "சமுதாய சமையலறைத் திட்டம்" : குவியும் பாராட்டுக்கள்!

யாழ் பல்கலைக்கழகத்தின் முன்மாதிரியான “சமுதாய சமையலறைத் திட்டம்” : குவியும் பாராட்டுக்கள்!

நாட்டின் பொருளாதார நிலை மந்தகதியான நேரத்தில்  யாழ்ப்பாண பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள் போதியளவு உணவு வசதியை பெறுவதில் நெருக்கடியை எதிர்கொண்டனர்.

இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சில விரிவுரையாளர்களின் பங்களிப்புடன் ஆரம்பித்த சமூக சமையலறை உணவுத்  திட்டம் மாணவர்களின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

திங்கள் முதல் வெள்ளி வரை ஏறத்தாழ ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்களுக்கு மேல் தங்கள் பசியினை ஆறிச்செல்கின்றனர்.

சமையலில் மரக்கறி வெட்டுவதில் இருந்து மாணவர்களுக்கு உணவு பரிமாறுதல் , பாத்திரம் கழுவுதல் என அனைத்து விடயங்களிலும் இவ் விரிவுரையாளர்களும் முழு மனதோடு ஈடுபடுவதுடன் மாணவர்களும் விரிவுரை தவிர்ந்த நேரங்களில் தங்களாலான உதவிகளினைச் செய்து வருகின்றனர்.

சில விரிவுரையாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட இவ் சமூக சமையலறை உணவுத் திட்டத்திற்கு பல விரிவுரையாளர்கள் கைகோர்க்க ஆரம்பித்திருக்கின்றார்கள். ஏறத்தாழ 4 மாதங்களாக சிறப்பாக மாணவர்கள் பசியாற சமூக சமையலறை தொடர்ந்து இயங்கி வருகின்றது.

நாட்டின் பொருளாதார நிலை  சுமூகமாகும் வரை தொடர்ந்தும் இயங்குவதற்கு தங்களாலான உதவிகளினை பல்கலைக்கழக பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் வழங்கமுடியும்.

இலங்கையில் எந்தவொரு பல்கலைக்கழகமும் எடுக்க முடியாத , நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு மாணவர் நலன் சார் செயற்பாட்டினை கிட்டத்தட்ட தொடர்ந்து யாழ் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருகின்ற நிலையில் இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்கவே அதனை பார்வையிட்டு பராட்டியிருந்தார்.

யாழ்ப்பாணப் பல்கலையில் கல்வி கற்கும் எந்தவொரு மாணவனும் மதிய நேரத்தில் பசியுடன் கல்வி கற்காமல் இலவசமாக உணவினைப் பெற்றுக்கொள்ள கூடிய முறையில் யாழ் பல்கலைக்கழக சமுதாய சமையலறை செயற்பட்ட வண்ணம் உள்ளது. ஒரு நாளிற்கு மாணவர்களுக்குரிய உணவிற்கான செலவு 50,000 ற்கு மேல் என்ற நிலை இருந்தாலும் இச் செயற்பாடு இன்று வரை  முன்னெடுத்து செல்லப்படுகின்றது.

இச் செயற்பாட்டினை ஆரம்பித்து வைத்த விரிவுரையாளர்கள் , அந்த சமுதாய சமயலறை தொடர்பாக அதற்கென கூட்டங்கள் கூடி முடிவுகளை எடுக்க கூடிய முறையில் பீடாதிபதிகள் , விரிவுரையாளர்கள் மாணவர்கள் ,நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களும் கலந்த குழு ஒன்றை அமைத்து யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறீசற்குணராஜா செயற்பட்டு வரும் விதம் பாராட்டுக்குரியது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் மற்றும் கலைப்பீட மாணவர்களும் இந்த செயற்பாட்டிற்காக துணை நிற்கும் பல்கலைக்கழக நிர்வாக உத்ததியோகத்தர்கள் மற்றும் இதனை செயற்படுத்துவதற்காக காலை முதல் மதியம் வரை உடல் உழைப்பினால் செயற்பட்டு வரும் மாணவர்கள் மற்றும் கல்விசார ஊழியர்களும் பாராட்டபட வேண்டியவர்களே.

Recent News