Friday, November 15, 2024
HomeLatest Newsரஷ்யாவிடம் ஐக்கிய நாடுகள் சபையின் உருக்கமான வேண்டுகோள்

ரஷ்யாவிடம் ஐக்கிய நாடுகள் சபையின் உருக்கமான வேண்டுகோள்

ரஷ்யா உக்ரைன் நிலப்பரப்புக்கள் மீது மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் தற்போது உக்ரைனின் ‘ஜபோரிஜியா’ பிரதேசத்தில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப் பெரிய அணு மின் நிலையம் மிகவும் முக்கிய இடத்தை பெற்றிருக்கின்றது.

ரஷ்ய படைகள் மேற்படி பிரதேசத்தை மிகவும் நெருங்கி வருகின்ற அதேவேளை கிழக்கு பகுதியில் சில பிரதேசங்களை விட்டு பின் வாங்கி செல்லுகின்ற ஒரு சூழலும் காணப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐ.நா வின் விசேட குழு ஒன்று உக்ரைனின் அணு மின் நிலையத்திற்கு சென்று நிலைமையை ஆய்வு செய்திருந்தனர்.

இந்நிலையில் தமது ஆய்வறிக்கையின் முடிவுகளை வெளியிட்ட ஐ.நா குழு, “உக்ரைனின் அணு மின் நிலையம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ரஷ்யா மிக நெருக்கமாக தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. அணு மின் நிலையத்தின் மீது குண்டுகள் விழுந்து நிலையம் வெடிக்குமாக இருந்தால் மிக நீண்ட பாதிப்பு மற்றும் அதிக ஆபத்துக்கள் ஏற்படும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.

எனவே ஐ.நா உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். ரஷ்யா மேற்படி தாக்குதல்களை நிறுத்த வேண்டும் ஐ.நாவின் அமைதிப் படைகள் மேற்படி பிரதேசத்திற்கு விரைந்து அணு மின் நிலையம் அமைந்துள்ள ‘ஜபோரிஜியா’ என்னும் பிரதேசத்தை யுத்த சூனியப் பிரதேச வலயமாக அறிவிக்க வேண்டும்.

அவ்வாறு அறிவித்தால் மட்டுமே மேற்படி அணு மின் நிலையம் மீதான தாக்குதல்களையும், அதன் பின் விளைவுகளையும் தடுக்க முடியும்” என ஆய்வாளர்கள் ஐ.நாவிற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்கள்.

இந்த நிலையில் மேற்படி அறிக்கையை மையப்படுத்தி ஐ.நா ரஷ்யாவிடம் உருக்கமான வேண்டுகோளினை விடுத்திருப்பதாகவும் மேற்படி அணு மின் நிலையம் மீதான தாக்குதல்களை உடனடியாக நிறுத்தி பெரும் ஆபத்தை தவிர்த்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Recent News