ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 19 ஆம் திகதி சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.
இது சர்வதேசதளத்தில் இலங்கைக்கு பெரும் இராஜதந்திர சமர் எனக் கருதப்படுகின்றது.
அந்த வகையில், இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் வாய்மொழி மூல அறிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி அமர்வில் வாசிக்கப்படவுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகியது.
அன்று இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் மிச்சேல் பச்லெட்டின் எழுத்துமூல அறிக்கை வாசிக்கப்பட்டது.
அத்துடன், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தலைப்பில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் கொண்டுவரப்பட்ட 51/1 என்ற புதிய தீர்மானம் 13 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
அதையடுத்து, இவ்வாண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத் தொடருக்கான நிகழ்ச்சி நிரலில் இலங்கை குறித்த விசேட தீர்மானங்களோ அல்லது விவாதங்களோ உள்ளடக்கப்படவில்லை.
இவ்வாறான சூழலில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் இந்த மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகி ஜுலை மாதம் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மேலும், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற 51/1 தீர்மானத்தின் பிரகாரம், நாட்டின் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் விவகாரத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும், பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல் மோசடிகள் என்பன மனித உரிமைகள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.