அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை அன்று முதன் முறையாக இடம்பெற உள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவரும் பங்கேற்கும் விவாதம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவில் இந்தாண்டு நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக அவர்கள் இருவரும் நேரடியாக விவாதிக்கும் முதல் விவாத மேடை இது.குடி நுழைவு, பணவீக்கம், கருக்கலைப்பு உரிமை, உக்ரைன், காசா ஆகிய பகுதிகளில் நடக்கும் போர் ஆகியவை விவாதத்தில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் தலைப்புகளில் அடங்கும்.அவர்கள் இருவரின் வயது கூட கவனத்தை ஈர்க்கும் என நிபுணர்கள் முன்னுரைக்கின்றனர்.
ஜோ பைடனுக்கு வயது 81, டொனால்ட் டிரம்புக்கு வயது 78. இருவரும் அமெரிக்கர்களின் சராசரி ஓய்வு பெறும் வயதை விட அதிகமாக உள்ளனர்.மேலும், இவர்கள் இருவரும் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் வயதான வேட்பாளர்கள் ஆவர்.விவாதத்தின் போது வாக்காளர்கள் வேட்பாளர்களின் முக்கிய அம்சங்களை உற்று நோக்குவார்கள் என்றும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு நாட்டை ஆட்சி செய்வதற்கான வேட்பாளரின் உடற்தகுதி மனதிறன் ஆகியவற்றை நம்ப வைக்கும் வகையில் அவர்களின் விவாதங்கள் இருக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.