Tuesday, December 24, 2024
HomeLatest Newsதிட்டமிட்ட அடிப்படையில் பாடசாலைகளை நடத்துவதில் சிக்கல்! கல்வி அமைச்சு

திட்டமிட்ட அடிப்படையில் பாடசாலைகளை நடத்துவதில் சிக்கல்! கல்வி அமைச்சு

அடுத்த வாரம் நகர்ப்புறங்களில் பாடசாலைகளை நடத்துவது குறித்து மீள்பரிசீலனை செய்ய கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகல் எரிபொருள் விடுவிப்பு தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விடுத்த டுவிட்டர் செய்தியே இதற்குக் காரணமாக கூறப்படுகின்றது.

நாட்டிற்கு எரிபொருளை பெற்றுக்கொள்ளும் திகதியை சரியாக கூறமுடியாத நிலையில் தற்போதுள்ள மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

அதற்கமைய, பொது போக்குவரத்து, மின் உற்பத்தி மற்றும் கைத்தொழில் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதன் காரணமாக எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பாடசாலைகள் நடத்தப்படும் விதம் தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்த தீர்மானத்தின் பின்னணியிலேயே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.

எப்படியிருப்பினும் தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு கடந்த வாரம் நடைபெறாத பாடசாலைகளை எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் நகர்ப்புறங்களில் நடத்த முடியுமா என்பது குறித்து நாளை தீர்மானம் எடுக்க கல்வி அமைச்சு தயாராகி வருகிறது.

அடுத்த வாரம் முதல் மூன்று நாட்களுக்கு நகரப் பகுதிகளில் பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ள போதிலும் அது நடைமுறையில் சாத்தியமில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Recent News