Thursday, January 23, 2025
HomeLatest Newsயாழில் இருந்து கொழும்புக்கான பயண நேரம் சுமார் ஒன்றரை மணித்தியாலம்- புதிய திட்டம் அறிவிப்பு!

யாழில் இருந்து கொழும்புக்கான பயண நேரம் சுமார் ஒன்றரை மணித்தியாலம்- புதிய திட்டம் அறிவிப்பு!

எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் அநுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரையிலான புகையிரதப் பயணங்கள், மீண்டும் ஆரம்பிக்கப்படுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் பகுதியில் ஓமந்தை வரை நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற புகையிரத பாதையின் நவீனமயமாக்கல் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக நேரில் ஆராயும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இரண்டு மாதங்களுக்குள் அநுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரையிலான புகையிரதப் பயணங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

புதிய ஸ்லீப்பர் கட்டைகள் மற்றும் தடங்கள் அமைப்பதன் மூலம் மணிக்கு 100 மைல் வேகத்தில் இயக்கக்கூடிய அதிநவீன ரயில்பாதையாக இந்த சாலை உருவாக்கப்படுவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக மஹவ தொடக்கம் ஓமந்தை வரையிலான இத்திட்டத்திற்காக இந்திய கடன் திட்டத்தின் கீழ் 3500 கோடி ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, இலங்கையில் தற்போது மேற்கொள்ளப்படும் மிகப்பெரிய அபிவிருத்தி திட்டமாக இத்திட்டம் அமைந்துள்ளது.

அநுராதபுரத்தில் இருந்து மஹவ வரையான புகையிரதப் பாதையானது மிகக் குறுகிய காலத்தில் பூர்த்தி செய்யப்படவுள்ளதுடன், இதன் மூலம் காங்கேசன்துறையிலிருந்து கொழும்புக்கு மிகவும் வசதியான, வினைத்திறன் மற்றும் வேகமான ரயில் சேவையை வழங்க முடியும்.

அத்துடன், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கான பயண நேரம் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Recent News