ஜலதோஷத்துக்காக ஆவி பிடிக்க நினைத்த மாணவி, பானைக்குள் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரின் ஆத்தூர் அருகே உள்ள மேலசேர்ந்தபூமங்கலம் என்ற கிராமத்தில் பதிவாகியுள்ளது.
குறித்த பகுதியில், கோமதிநாயகம் தனது மனைவி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வரும் நிலையில்
இளைய மகள் கௌசல்யா(18) தனியார் தாதியார் கல்லூரியில் நர்ஸிங் படித்து வந்துள்ளார்.
கௌசல்யாவுக்கு ஜலதோஷம் ஏற்பட்டதால், வெந்நீரை பானையில் ஊற்றி மருந்து கலந்து ஆவிப்பிடித்தபோது திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு வெந்நீரிலே மயங்கி விழுந்துள்ளார்.
தனது வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் சுமார் 20 நிமிடங்களுக்கு மேலாக பானைக்குள் தலையை வைத்தபடியே இருந்துள்ளார்.
வீடு திரும்பிய பெற்றோர் பானைக்குள் மகள் இருப்பதைக் கண்டு அதிர்ந்து பின்னர் கௌசல்யாவை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
ஆயினும் மகள் வரும் வழியிலே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவியின் இறப்பு குறித்து தகவல் அறிந்த பொலிஸார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.