Friday, November 15, 2024
HomeLatest Newsபுதிய எரிபொருள் விநியோக பொறிமுறைக்கு முச்சக்கர வண்டி தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

புதிய எரிபொருள் விநியோக பொறிமுறைக்கு முச்சக்கர வண்டி தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

ஓகஸ்ட் முதலாம் திகதி முதல் நியமிக்கப்பட்ட ஓர் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்து மாத்திரமே முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்ற கட்டளைக்கு அகில இலங்கை முச்சக்கர வண்டிச் சாரதிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

திங்கட்கிழமை முதல் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள அனைத்து முச்சக்கர வண்டி உரிமையாளர்களும் அந்தந்தப் பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யுமாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பதிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து ஓகஸ்ட் முதலாம் திகதிக்குப் பின்னர் மாத்திரமே முச்சக்கர வண்டிகள் எரிபொருளைப் பெற அனுமதிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த நடவடிக்கை நியாயமற்றது மற்றும் நடைமுறைக்கு மாறானது. எனவே இதனை அமுல்படுத்தக் கூடாது என அகில இலங்கை முச்சக்கர வண்டிச் சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

வாடகைக்கு பயணிகளை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டிகள் ஒரு நிரப்பு நிலையத்தை நம்பியிருக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறான நடவடிக்கையானது வாகனங்களை தனியார் பாவனைக்கு பயன்படுத்தும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு மாத்திரமே நன்மை பயக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய தொழில்நுட்பத்தின் மூலம் வாடகைக்கு இயக்கப்படும் முச்சக்கர வண்டிகளை இனங்கண்டு தேவையான அளவு எரிபொருளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

QR அமைப்பு மூலம் எரிபொருள் வழங்கப்படும் என்பதால், ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டை விட எந்த தனிநபரும் தவறாக பயன்படுத்தவோ அல்லது பெறவோ முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

முச்சக்கர வண்டிகளை பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு அமைச்சர் காஞ்சன விஜேசேகரவினால் விடுக்கப்பட்ட புதிய பணிப்புரை தற்போதுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வாக மாறுவதை விட அதிக சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recent News