உற்சாகமான நேரத்தை அனுபவிக்க விரும்புவோர் இலங்கைக்கு வரலாம், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ளார்.
காலி முகத்திடலில் போராட்டம் செய்யும் இளைஞர்களும் சில அரசியல் கட்சிகளும் ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம், சட்டத்தரணிகள் சங்கம் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி இராஜினாமா செய்வது பற்றி அவர்கள் எதுவும் குறிப்பிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே இரண்டு வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்திற்குப் பின்னர் இலங்கையும் கடுமையான உணவு நெருக்கடியை எதிர்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கடனைச் செலுத்துவதற்கு இலங்கையில் பணம் இல்லை என்பதை ஏற்றுக்காள்ள வேண்டுமென தெரிவித்த பிரதமர் அதற்காக வெட்கப்படுவதாகவும் எனினும் இதுதான் யதார்த்தம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாத்துறை குறித்து பேசிய பிரதமர், உற்சாகமான நேரத்தை அனுபவிக்க விரும்புவோர் இலங்கைக்கு வரலாம் என்றும் ஒருவேளை அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதி வீட்டிற்குச் செல்லுங்கள் என்று எழுதப்பட்ட பதாகைகளை அவர்கள் வைத்திருக்க முடியும் என்றும் மேலும் உங்கள் நாட்டின் பிரதமரை வீட்டிற்குச் செல்லுங்கள் என்று நீங்கள் ஒரு பதாகையைக்கூட வைத்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.