Friday, January 17, 2025
HomeLatest Newsமுள்ளிவாய்க்காலில் சாவடைந்த ஆன்மாக்களின் கர்மாவைதுரோகமிழைப்பவர்களும் அனுபவிப்பர்! சரவணபவன் தெரிவிப்பு

முள்ளிவாய்க்காலில் சாவடைந்த ஆன்மாக்களின் கர்மாவைதுரோகமிழைப்பவர்களும் அனுபவிப்பர்! சரவணபவன் தெரிவிப்பு

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் சிக்குண்டு சிதையுண்டுபோன ஆன்மாக்களின் கர்மா எப்படி எதிரிகளை பாடாய்படுத்துகின்றதோ அதேபோன்று அந்த ஆன்மாக்களுக்கு துரோகமிழைத்தவர்களையும், துரோகமிழைப்பவர்களையும் பாடாய்படுத்தும்.

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 13ஆவது ஆண்டு நாளை மறுதினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மூச்சுக்கூட விடமுடியாத ஒடுங்கிய நிலப்பரப்புக்கள் லட்சம் தமிழர்களை அடைத்து, அவர்கள் மீது எறிகணைகளையும், கொத்துக்குண்டுகளையும், பொஸ்பரஸ் குண்டுகளையும் பொழிந்து தள்ளி அழித்தொழித்தது அரச பயங்கரவாதம்.

சிங்கள – பௌத்தம் ஊட்டிய போதையில் திளைத்து நின்று தமிழர்களை வேட்டையாடிய சிறிலங்கா அரசின் அந்தக் கொடூரத்தை இப்போது நினைத்துப் பார்த்தாலும் இதயம் கனக்கின்றது.

பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டு சிங்கள தேசம் இப்போது துடிக்கின்றது. இதைவிடப் பன்மடங்கு வலியை – வேதனையை – துயரத்தை எம்மக்களும்தான் சுமந்து நின்றார்கள்.

உணவில்லை, மருந்தில்லை, உயிருக்கு உத்தரவாதமில்லை என்ற மரணத்தின் பாதையிலேயேதான் பயணித்தார்கள். எவரும் மனமிரங்கவில்லை. எந்த வல்லரசும் வளைந்து கொடுத்து எம்மவர்களை மீட்கவுமில்லை.

கற்பனைகூட செய்து பார்க்க முடியாத நவீன யுகத்தின் மிகப் பெரும் மனிதப் பேரவலம் நடந்தேறி 13ஆண்டுகளாகின்றன.

முள்ளிவாய்க்காலில் சாவை அணைத்துக் கொண்ட ஆன்மாக்கள் 13ஆண்டுகளாக அழுதுகொண்டிருக்கின்றன. தங்களின் நீதிக்காய் ஏக்கத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.

ஆன்மாக்களை மிஞ்சிய சக்தி எதுவுமில்லை என்பதை அவை இப்போது நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது நிதர்சனமாகிக் கொண்டிருக்கின்றது.

எந்த மக்கள் எங்களின் எதிரிகளைத் தூக்கிக் கொண்டாடினார்களோ அவர்களே எதிரிகளை இப்போது தூக்கி மிதித்துக் கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் அனுபவித்த மரண பயத்தையும் எதிரிகளுக்கு காட்டியிருக்கின்றார்கள்.

நாங்கள் பயந்து பயந்து பங்கருக்குள் பதுங்கியதைப்போன்று எதிரிகளையும் பதுங்க வைத்திருக்கின்றார்கள்.

எதிரிகளுக்கு தூக்குக் காவடி தூக்கியவர்களும் எங்கள் ஆன்மாக்களின் கர்மாக்களை எதிர்கொண்டு சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றார்கள்.

அந்த ஆன்மாக்கள் எந்த இலட்சியத்துக்காக – எந்தத் தாகத்துக்காக – தாயகத்துக்காக செத்து மடிந்ததோ அதைத் தூக்கியெறிந்து விட்டு, அந்த ஆன்மாக்களையே கூனிக்குறுக வைக்கும் மிகமோசமான துரோகமிழைப்பவர்களும் கர்மாவிலிருந்து தப்ப முடியாது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்போம் என்று கூறிக்கூறியே அதை மழுங்கடிப்பவர்களும், அந்த ஆன்மாக்களின் இலட்சியத்தை நீர்த்துப்போகச் செய்பவர்களும் இனிவரும் நாள்களில் கர்மாவை அனுபவிப்பார்கள்.

எந்தவொரு சமரசத்துக்குமிடமின்றி – விட்டுக்கொடுப்புமின்றி – கடைசிக்கணம் வரையில் – தமிழர்களின் சுதந்திரத் தாயகத்துக்காக மடிந்த அந்த ஆன்மாக்களுக்கு, நாமும் நேர்வழியில் – விசுவாசமாக – அவர்கள் மீது சத்தியம் செய்து நீதியையும், சுதந்திர தமிழர் தாயகத்தையும் பெற்றுக் கொடுப்பதற்கு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் உறுதிபூணுவோம்.

அந்த உறுதியைக் காப்பாற்ற எந்தவொரு தியாகத்தையும் செய்வதற்குத் தயாராகுவோம், என்றுள்ளது.

Recent News