Sunday, January 19, 2025
HomeLatest Newsஎன்னை தூக்கி பஸ் வண்டிக்குள் வீசினர்! ஹிருணிகா

என்னை தூக்கி பஸ் வண்டிக்குள் வீசினர்! ஹிருணிகா

கொழும்பு – கோட்டை ஜனாதிபதி மாளிகையின் பிரதான வாயிலுக்கு முன்பாக நேற்றுக் ( 6) காலை போராட்டத்தில் ஈடுபட்ட ஐக்கிய மகளிர் சக்தியின் தலைவி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.

குறிப்பாக அவருடன் போராட்டத்தில் ஈடுபட்ட, ஐக்கிய மக்கள் சக்தியின் வெலிகம அமைப்பாளர் ரொஷான் ஜயவிக்ரம உள்ளிட்ட மேலும் 11 பேரும் இதன்போது கைது செய்யப்பட்டு, நேற்று மாலை பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், தமது கைது தொடர்பிலான தகவல்களை ஹிருணிகா பிரேமச்சந்திர ஊடகங்களிடம் வெளிப்படுத்தினார்.

அதன்படி அவர் தெரிவிக்கையில்,

‘ எனக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நன்றி. நானும் எனது குழுவினரும் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக சமூக வலைத்தள நேரலை ஒன்றினைச் செய்துகொண்டிருக்கும் போதே கைது செய்யப்பட்டோம்.

எம்மை கைது செய்ய கைது உத்தரவுகளோ அல்லது கைதுக்கான காரணமோ எமக்கு அறிவிக்கப்படவில்லை.

எம்மை அங்கிருந்து அகற்றுவதற்காகவே கைது செய்தனர். நாம் எந்த சட்டத்தையும் மீறவில்லை.

என்னை சுமார் 10 ஆண்கள் தூக்கி பஸ் வண்டிக்குள் வீசினர். ஏனைய பெண்களையும் அப்படித் தான் செய்தனர்.

என்னை பொலிஸார் தாக்கவில்லை. எனினும் பொலிஸார் கைது செய்யப்பட்ட பல பெண்களை தாக்கினர்.

கூந்தலை பிடித்து இழுத்து கொடூரமாக நடந்து கொண்டனர். தகாத வார்த்தை பிரயோகங்களை முன்னெடுத்தனர்.

எமது கையடக்கத் தொலைபேசிகளை பறித்துக் கொண்டனர். இதுவரை அவை எமக்கு மீள அளிக்கப்படவில்லை.

ஒன்று மட்டும் நிச்சயம், கோட்டாபய ராஜபக்க்ஷ எதிர்வரும் 9 ஆம் திகதி கண்டிப்பாக வீட்டுக்கு செல்வார். அவரை அனுப்பும் போராட்டம் வெற்றி பெறும்.

மற்றையது, நாம் எப்படி அவ்வளவு பாதுகாப்பையும் மீறி ஜனாதிபதி மாளிகை வரைச் சென்றோம் என்பது தற்போது பெரும் பேசு பொருளாகியுள்ளது.

அதனால் அப்பகுதியில் கடமையில் இருந்த அப்பாவி பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரை பணி இடை நீக்கம் செய்ய முயற்சிப்படுவதாக அறிய முடிகிறது. இது அநியாயத்தின் உச்சம்.

உண்மையில் சாதாரணமாகவே நான் அங்கு சென்றேன். காற் சட்டை, ரீ சேர்ட் அணிந்து, தொப்பியொன்றினையும் கண்ணாடியையும் அணிந்தவாறே நான் அங்கு சென்றேன்.

நாம் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பே ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக முற்றுகை போராட்டம் நடத்துவது என முடிவு செய்தோம்.

நானும் எனது நண்பர்களும் அது தொடர்பில் கடந்த சில நாட்களாகவே, வாகனத்திலும் தனியாகவும் அப்பகுதிக்கு சென்று எவ்வாறு செல்லலாம் என்பது குறித்து ஆராய்ந்தே அங்கு சென்றோம்.

கோட்டாபய பொருளாதார விடயத்தில் மட்டுமல்ல, பாதுகாப்பு விடயத்திலும் தோல்வியடைந்துள்ளார்.

நாம் அங்கு செல்லும் வரை கோட்டாவின் உளவுத்துறை அதனை அறிந்திருக்கவில்லை. ‘ என ஹிருணிகா குறிப்பிட்டார்.

Recent News