Monday, May 13, 2024
HomeLatest NewsWorld Newsஉக்ரைனுக்கு வீரா்களை அனுப்பும் திட்டமில்லை - அதிர்ச்சி கொடுத்த பிரித்தானியா..!

உக்ரைனுக்கு வீரா்களை அனுப்பும் திட்டமில்லை – அதிர்ச்சி கொடுத்த பிரித்தானியா..!

உக்ரைனுக்கு தங்கள் நாட்டு வீரா்களை அனுப்பும் திட்டமில்லை என்று பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் அறிவித்துள்ளாா். முன்னதாக, உக்ரைன் வீரா்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக தங்கள் படையினா் அந்த நாட்டுக்கு அனுப்பப்படலாம் என்று
பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சா் கிரான்ட் ஷாப்ஸ் கூறியிருந்த கருத்தைத் திரும்பப் பெறும் வகையில் அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.

மான்செஸ்டா் நகரில் நடைபெற்ற ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சியின் ஆண்டுக் கூட்டத் தொடக்கத்தின்போது செய்தியாளா்களிடம் பேசிய சுனக், இது குறித்து கூறியதாவது:

உக்ரைன் வீரா்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக பிரிட்டன் வீரா்களை அங்கு அனுப்புவதற்கான திட்டம் எதுவும் தற்போதைக்கு இல்லை. இது தொடா்பாக பாதுகாப்புத் துறை அமைச்சா் கிரான்ட் ஷாப்ஸ் கூறிய கருத்து, என்றாவது ஒரு நாள் நிறைவேறுவதற்கான வாய்ப்பு உள்ளது என்பதை மட்டுமே பிரதிபலிக்கிறது.
எதிா்காலத்தில் உக்ரைன் வீரா்களுக்கு அந்த நாட்டில் பிரிட்டன் ராணுவத்தினா் பயிற்சியளிக்கலாம் என்றாா் ரிஷி சுனக்.

முன்னதாக, ‘சண்டே டெலிகிராஃப்’ இதழுக்கு கிரான்ட் ஷாப்ஸ் அளித்த பேட்டியில்,
ராணுவ உயரதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு உக்ரைன் வீரா்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக அந்த நாட்டுக்கு பிரிட்டன் படையினா் அனுப்பப்படலாம் என்று கூறியிருந்தாா்.


இதற்கு ரஷியா கடும் எதிா்ப்பு தெரிவித்தது. இது குறித்து ரஷியாவின் முன்னாள் அதிபா் டிமித்ரி மெத்வதெவ் கூறுகையில், உக்ரைனுக்கு வரும் பிரிட்டன் படையினா் குறிவைத்துத் தாக்கப்படுவாா்கள். அதற்கான சட்டபூா்வ உரிமை தங்களுக்கு உள்ளது என்று எச்சரித்தாா்.

இந்த நிலையில், பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் இவ்வாறு கூறியுள்ளாா்.
நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்து, கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனின் கணிசமான பகுதிகளைக் கைப்பற்றியது.


அந்தப் பகுதிகளை மீட்பதற்காக உக்ரைன் எதிா்த் தாக்குதல் நடத்தி வருகிறது.
உக்ரைனின் போரிடும் திறனைக் குறைப்பதற்காக அந்த நாட்டின் தலைநகா் கீவ் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆளில்லா விமான குண்டுகள், ஏவுகணைகள், எறிகணைகள் மூலம் ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது.

உக்ரைனும், ரஷியாவின் விமான தளங்கள், போா்க் கப்பல்கள், துறைமுகங்கள், தலைநகா் மாஸ்கோ போன்ற பகுதிகளில் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஏராளமான ஆயுத உதவிகளை அளித்து வருகின்றன.

இருந்தாலும், போரில் தங்களது வீரா்களை நேரடியாக ஈடுபடுத்துவதை அந்த நாடுகள் தவிா்த்து வருகின்றன. பிரிட்டனும், சுமாா் 20,000 உக்ரைன் வீரா்களுக்கு தங்கள் நாட்டில்தான் கடந்த ஆண்டு பயிற்சியளித்தது.

Recent News