முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரின் காலை முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் கழுவியுள்ளார்.
சில தினங்களிற்கு முன்னர் மத்தியபிரதேச மாநிலம் சித்ஹி மாவட்டத்தின் சாலையோரம் அமர்ந்திருந்த பழங்குடியின இளைஞர் மீது நபர் ஒருவர் சிறுநீர் கழித்தார்.
இது தொடர்பான காணொளிகள் சமூகவலைதளத்தில் வைரலான நிலையில், இது குறித்து விசாரணை நடத்திய பொலிஸார் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்தவர் அதேபகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி பர்வேஷ் சுக்லா என்பதை கண்டுபிடித்தனர்.
இந்நிலையில், பர்வேஷ் சுக்லா தலைமறைவாகிய நிலையில் அவரை கைது செய்வதற்கு பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அத்துடன், இந்த விடயத்தில் குற்றவாளி மீது தேசியபாதுகாப்பு சட்டம் பாயும் என்றும் மத்தியபிரதேச முதல் மந்திரி அறிவித்திருந்தார்.
அதனை தொடர்ந்து, பாஜக நிர்வாகி பர்வேஷ் சுக்லாவை பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளதுடன் அவரை சிறையிலும் அடைத்துள்ளனர்.
அத்துடன், அவரின் வீட்டின் ஒரு பகுதியை அதிகாரிகள் நேற்றைய தின புல்டோசர் கொண்டும் இடித்துள்ளனர்.
இவ்வாறான சூழலில், முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான், முகத்தில் சிறுநீர் கழித்து அவமதிக்கப்பட்ட பழங்குடி இளைஞரை போபாலில் உள்ள தனது இல்லத்திற்கு வரவழைத்து காலை கழுவியுள்ளதுடன் அவருக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தியுள்ளார்.
பின்னர் சிவராஜ் சிங் சவுகான், அந்த இளைஞரிடம் அந்த வீடியோவைப் பார்த்து தான் வேதனைப்பட்டதாகவும், அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் மக்கள் தனக்கு கடவுள் போன்றவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்த காணொளிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.