ஈகுவடார் நாட்டின் குவாயாகில் நகரில் இருந்து நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் நோக்கி பயணிகள் விமானம் சென்று கொண்டிருந்தது.
இந்த விமானத்தில் தமாரா என்கிற கர்ப்பிணி பெண் பயணம் செய்தார். ஆனால் அவர் கர்ப்பமாக இருந்தது அவருக்கே தெரியாது என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் விமானம் ஆம்ஸ்டர்டாம் நகரை நெருங்கி கொண்டிருந்தபோது தமாராவுக்கு திடீரென கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. வலியில் அவர் அலறி துடித்தார்.
இதையடுத்து அவர் அருகில் இருந்த மாக்சிமிலியானோ என்கிற பெண் தமாராவை விமான கழிவறைக்கு அழைத்து சென்றார்.
அதேபோல் விமானத்தில் பயணம் செய்த ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த 2 டாக்டர்கள் மற்றும் ஒரு நர்சும் உதவிக்கு சென்றனர்.
தனக்கு என்ன நடக்கிறது என தெரியாமல் வலியுடன் தமாரா பரிதவித்துக் கொண்டிருந்தபோது திடீரென அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தான் கர்ப்பமானதையே அறியாமல் குழந்தை பெற்றெடுத்ததை எண்ணி தமாரா ஆச்சரியத்தில் உறைந்து போனார்.
தமாரா குழந்தை பெற்றெடுத்த விஷயம் அறிந்ததும் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர்.
இதையடுத்து விமானம் ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்கியதும் அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவ ஊழியர்கள் தமாரா மற்றும் அவரது குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
தாயும், சேயும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதனிடையே பிரசவத்தின்போது தனக்கு பெரிதும் உதவிய சக பயணியான மாக்சிமிலியானோவின் பெயரை தனது குழந்தைக்கு தமாரா சூட்டினார்.