ஆசிரியர் ஒருவர், மாணவர்களிற்கு கற்பிப்பதற்காக தனக்கு பதிலாக வேறு ஒருவரை நியமித்துள்ளமை அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இச்சம்பவம் கர்நாடக மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
அங்கு, கலபுராகி மாவட்டம் வாடி அருகே பாலிநாயக் தாண்டாவில் அரசு தொடக்கப் பள்ளி ஒன்று இயங்கி வந்துள்ள நிலையில்,அங்கு 25 மாணவர்கள் கல்வி கற்று வந்துள்ளனர்.
அத்துடன், தலைமை ஆசிரியராக அய்யப்ப குண்டகுர்த்தியும், ஆசிரியராக மகேந்திரகுமாரும் பணியாற்றுவதுடன், அவர், வாரத்திற்கு 2 முறை மட்டுமே பள்ளிக்குச் சென்று வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.
மகேந்திரகுமார், ஒழுங்காக பள்ளிக்கு செல்லாததுடன் மாணவர்களிற்கு கற்பிப்பதற்காக மாதம் 6 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பெண் ஒருவரையும் நியமித்துள்ளார்.
இதனால், பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் பலமுறை புகாரளித்துள்ள போதிலும், தலைமை ஆசிரியர் கண்டிக்காது இருந்துள்ளார்.
அதனால், பெற்றோர் அந்த விடயத்தினை கல்வித்துறை துணை இயக்குநரின் பார்வைக்கு கொண்டு சென்ற நிலையில், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அதையடுத்து, மகேந்திரகுமாரை பணிக்கு திரும்புமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதுடன், மாவட்ட அதிகாரிகள், அவர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்துள்ளனர்.
இது தொடர்பாக, கல்வி அதிகாரி சக்ரப்பகவுடா பிரதார், ஒரு ஆசிரியராக ஆள்மாறாட்டம் செய்வது குற்றமாகும் எனவும் ஆகவே, அந்த ஆசிரியர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.